Doctor Vikatan: அம்மாவின் கால்களில் வீக்கம்… கிட்னி பிரச்னையா, இதயக் கோளாறா?

Spread the love

Doctor Vikatan: என் அம்மாவின் கால்கள் எப்போதும் வீங்கியே இருக்கின்றன. வீக்கமுள்ள பகுதியை அமுக்கினால் குழி விழுகிறது. கால்கள் வீங்கினால் கிட்னி அல்லது இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என்கிறார்களே, அது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

கால்களில் ஏற்படும் வீக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்னைகள். முக்கியமாக, இதயம் பலவீனமாக இருப்பதன் அறிகுறியாக அது இருக்கலாம்.

இதயத்தில் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இப்படி இரண்டு கால்களும் வீங்கலாம். அழுத்தும்போது குழியாகலாம். இதை ‘பிட்டிங் எடிமா’ (Pitting Edema) என்று சொல்கிறோம். முதல் வேலையாக உங்கள் அம்மாவுக்கு இசிஜி, எக்கோ, சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்து, இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கால் வீக்கத்துக்கான அடுத்த முக்கிய காரணம், சிறுநீரகக் கோளாறு.

சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு காரணங்கள் தவிர, குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிலருக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நிற்பதன் காரணமாகவும் கால்களில் வீக்கம் வரலாம். இதை ‘டிபெண்டன்ட் எடிமா’ (Dependent Edema) என்கிறோம்.

ரத்த அழுத்தம்

இந்தக் காரணத்தால் கால்கள் வீங்கும்போது, சம்பந்தப்பட்ட நபர், சிறிது நேரம் படுத்து எழுந்திருந்தால், வீக்கம் முற்றிலும் வற்றிப் போய், சாதாரணமாக மாறுவதைப் பார்க்கலாம். அந்த நாளின் இறுதியில் மீண்டும் கால்களில் வீக்கம் இருக்கலாம். ஆனாலும், இது பயப்பட வேண்டிய பிரச்னை அல்ல.

ரத்த அழுத்தம் (பிபி) உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாலும் சிலருக்கு கால்களில் வீக்கம் வரலாம். இவர்களுக்கும் இரவு தூங்கி எழுந்தால், காலையில் வீக்கம் வடிந்துவிடும். மீண்டும் அடுத்த நாள் கால்கள் வீங்கும். கல்லீரலில் ஏதேனும் பிரச்னை காரணமாக  கால்களில் வீக்கம் ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். இதையும் எளிமையான ரத்தப் பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம். எனவே, உங்கள் அம்மாவை முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பரிந்துரைக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *