Doctor Vikatan: காலப்போக்கில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா கொழுப்பக்கட்டி?

Spread the love

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நெற்றிப் பகுதியில் லேசான புடைப்பு போல வந்தது. சரியாகவே இல்லை.  மருத்துவரைப் பார்த்தபோது, அது  கொழுப்புக்கட்டி என்று சொன்னார். உடலில் கொழுப்புக் கட்டி ஏன் ஏற்படுகிறது… அது பிற்காலத்தில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

கொழுப்புக்கட்டிகள் (Lipomas) ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனால், இது முக்கியமாக மரபணு ரீதியான பாதிப்புகள் மற்றும் கொழுப்பு செல்கள் அசாதாரணமாக, அளவுக்கு அதிகமாக வளர்வதோடு தொடர்புடையது. இவை புற்றுநோய் அல்லாத, பொதுவாக உடலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத கட்டிதான். கொழுப்புக்கட்டிகள் என்பவை சாதாரண கொழுப்பு வளர்ச்சியே தவிர, இவை ஒருபோதும் புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதில்லை.

சாதாரண கொழுப்புக்கட்டிகள் மென்மையாகவும், வலியற்றதாகவும், சருமத்துக்கு அடியில் தொட்டால் எளிதாக நகரக்கூடியதாகவும் இருக்கும். இருப்பினும்,  சில எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு பொது மருத்துவர் அல்லது  சரும மருத்துவரை (Dermatologist) அணுக வேண்டும். அவை…

வேகமான வளர்ச்சி: சில வாரங்கள் அல்லது மாதங்களில் கட்டியின் அளவு கணிசமாக அதிகரிப்பது.

வலி: கட்டியைத் தொடும்போது மென்மையாக மாறுவது அல்லது வலி ஏற்படுவது.

கட்டியின் தன்மையில் மாற்றம்: கட்டி மிகவும் கெட்டியாக, கடினமாக மாறுவது அல்லது ஒரே இடத்தில் நிலையாக நிற்பது (அழுத்தும்போது நகராமல் இருப்பது).

சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்: கட்டி இருக்கும் இடத்தின் மேல் உள்ள சருமப்பகுதியில் புண்கள், சிவந்து போதல் அல்லது அசாதாரணமான பள்ளங்கள்  ஏற்படுவது.

சருமத்துக்கு அடியில் ஒரு கேப்ஸ்யூலுக்குள் (fibrous capsule) அடைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கொழுப்பு வளர்ச்சி என்பதால், அவை தானாகக் கரையாது.

கொழுப்புக்கட்டிகள் தானாகவே மறைந்துவிடாது. அவை சருமத்துக்கு அடியில் ஒரு கேப்ஸ்யூலுக்குள் (fibrous capsule) அடைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் அல்லாத கொழுப்பு வளர்ச்சி என்பதால், அவை தானாகக் கரையாது. உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சியால் சுருங்காது மற்றும் தானாகவே மறைந்தும் போகாது. பல கட்டிகள் ஒரே அளவிலேயே இருக்கும் என்றாலும், சில கட்டிகள் காலப்போக்கில் மெதுவாக வளரக்கூடும்.

இவை பாதிப்பில்லாதவை என்பதால், இவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது பொதுவாக அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இருப்பினும், கட்டி, வலியை ஏற்படுத்தினாலோ, உடலின் அசைவுகளைத் தடுத்தாலோ அல்லது தோற்றப் பொலிவைக் கெடுப்பதாக இருந்தாலோ அதனை அகற்றிவிடலாம்.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் என்பது மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள முறை. மயக்க மருந்து (anesthesia) அளித்து, கொழுப்புக்கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்படும். கொழுப்புக்கட்டிகள் மிகவும் சகஜமானவை. சராசரியாக 1,000 பேரில் ஒருவருக்கு கொழுப்புக்கட்டி உள்ளது. கொழுப்புக்கட்டிகள் பெரும்பாலும் 40 முதல் 60 வயதிற்குள் தோன்றும், ஆனால், அவை எந்த வயதிலும் வரலாம்.  பிறக்கும்போதே கூட  இருக்கலாம்.

கைகள் அல்லது கால்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை, நெற்றி, கழுத்து என
கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம்.

கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் உருவாகலாம். அரிதான சந்தர்ப்பங்களில், கொழுப்புக்கட்டிகள் தசைகள், உள் உறுப்புகள் அல்லது மூளையில் கூட வளரக்கூடும். கொழுப்புக்கட்டி உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரே ஒரு கட்டி மட்டுமே இருக்கும், இருப்பினும் சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் வரவும் வாய்ப்புள்ளது.  கைகள் அல்லது கால்கள், முதுகு, கழுத்து, தோள்பட்டை, நெற்றி, கழுத்து என 
கொழுப்புக்கட்டிகள் உடலின் எந்தப் பகுதியிலும் வரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *