Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பயன்படுததிய மருந்து… சருமத்தில் அலர்ஜி… நிரந்தர தீர்வு உண்டா?

Spread the love

Doctor Vikatan: என் ஆண் நண்பருக்கு 30 வயதாகிறது.  ஜலதோஷத்திற்கு   மெடிக்கல் ஷாப்பில்  மாத்திரை வாங்கிப் பயன்படுத்திய போது உதடு, ஆணுறுப்பு, கை விரல் இடுக்கு, உள்வாய் மேல் அண்ணம் போன்ற பகுதிகளில் வீக்கமும் அரிப்பும் ஏற்பட்டது. 

நீர்கோத்து வெடித்து பெரும் அவஸ்தையை உண்டாக்கியுள்ளது. அவரது சிறு வயதில் இரண்டு, மூன்று முறையும் சமீப வருடங்களில் இரண்டு, மூன்று முறையும் இவ்வாறு நடந்துள்ளது. எதனால் இப்படி நடக்கிறது என்று  குழம்பியுள்ளார்.

பிறகு மருத்துவரை அணுகியபோது தான் அவருக்கு Sulfa Drug allergy உள்ளது தெரிய வந்தது. தற்போது அவரது உதடுகள் வெள்ளை நிறத்தில் உள்ளன. இது என்ன பிரச்னை… எப்படி சரிசெய்வது?

பதில் சொல்கிறார், திருச்சி, தென்னூர் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் நிறைமதி

சருமநல மருத்துவர் நிறைமதி
சருமநல மருத்துவர் நிறைமதி

நோயாளிக்கு மருந்து ஒவ்வாமை (Drug Allergy) ஏற்பட்ட வரலாறு உள்ளதை நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அலர்ஜி வந்த இடத்தில் நிறமிகள் (Pigment) இல்லாமல் போயுள்ளன. இதனால் ‘போஸ்ட் இன்ஃப்ளமேட்டரி ஹைபோபிக்மென்டேஷன்’ (Post-inflammatory hypopigmentation) என்ற பிரச்னை உருவாகியுள்ளது.

அலர்ஜி வந்த இடத்தில் சருமத்தின் நிறமிகள் பலவீனமடைந்து வெண் புள்ளிகள் (White spots) தோன்றியிருக்கும். சிலருக்கு இந்த ஹைபோபிக்மென்டேஷன் தானாகவே சரியாகிவிடும். மாறாமல் தொடரும் புள்ளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். நிறமி செல்களை (Pigment cells) சீராக்கும் கிரீம்கள் மற்றும் ஆயின்மென்ட் (Ointments) கொடுக்கப்படும்.

இதில் முன்னேற்றம் இல்லை என்றால், நிறமி செல்களைத் தூண்டுவதற்காக ‘எக்சைமர் லேசர்’ (Excimer laser) சிகிச்சை முறை பயன்படுத்தப்படும். சருமத்தில் மாற்றங்களை எதிர்பார்ப்பதற்கு 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும்.

நிறமி செல்களை (Pigment cells) சீராக்கும் கிரீம்கள் மற்றும் ஆயின்மென்ட் (Ointments) கொடுக்கப்படும்.

ஒவ்வாமையை ஏற்படுத்திய மருந்தை அடையாளம் காண வேண்டும். உங்கள் நண்பருக்கு அது   ‘சல்ஃபா மருந்து’  என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மீண்டும் பாதிப்பு வராமல் இருக்க சல்ஃபா மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

சருமம் சென்சிட்டிவ் தன்மை (Sensitive) கொண்டதாக இருப்பதால், அதை ஈரப்பதத்துடன் (Moisturized) வைத்துக்கொள்ள வேண்டும். நிறமிகளை மீட்கும் தைலங்களைத் தொடர்ந்து பயன்படுத்திவிட்டு, மருத்துவரின் ஆலோசனையைப் பின்தொடர (Follow-up) வேண்டும்.

டாக்டர் நிறைமதி:

திருச்சி, தென்னூர் காவேரி மருத்துவமனையில் சருமநல மருத்துவராகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *