Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன… இது மீனிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறதா… சைவ உணவுக்காரர்கள் இதைச் சாப்பிடலாமா… இம்மாத்திரையின் பயன்கள் என்னென்ன?
-அ. யாழினி பர்வதம் சென்னை
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

மீன் எண்ணெய் மாத்திரைகள் நல்ல கொழுப்பு அதிகமுள்ள வவ்வால் மீன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
இந்த மாத்திரைகள் மட்டுமன்றி, அவற்றின் வெளி உறை (Capsules) கூட விலங்குக் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுவதால், இது முற்றிலும் அசைவ (Non-Vegetarian) உணவுதான். எனவே, சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
மீன் எண்ணெயில் உடலுக்கு அதிக நன்மையளிக்கக்கூடிய ‘ஒமேகா-3 கொழுப்பு அமிலம்’ (Omega-3 fatty acid) நிறைந்துள்ளது. வழக்கமாக மீன் சாப்பிடாதவர்களுக்கும், ஒமேகா-3 சத்து கிடைக்காதவர்களுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
இது இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. மூளை வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகளுக்கும், சருமத்தின் (Skin) ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நல்லது.
உடலில் நல்ல கொழுப்பு தேவைப்படும் அனைத்து பாகங்களுக்கும் இது பயன்படும். மீன் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள், மூட்டு வலி மற்றும் கீல்வாதம் (Arthritis) உள்ளவர்களுக்கு ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

முதன்முறையாக மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு இது சில சமயங்களில் வயிற்று உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தலாம். எனவே, காலை அல்லது மதிய உணவிற்குப் பிறகு இதை எடுத்துக்கொள்வது செரிமானத்திற்கு நல்லது.
உங்களுக்கு ஏற்கெனவே ஏதேனும் நோய்கள் இருந்தாலோ அல்லது ரத்த அடர்த்தியைக் குறைக்கும் (Blood thinners) மருந்துகள் சாப்பிட்டு வந்தாலோ, மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இதைச் சாப்பிடத் தொடங்க வேண்டும்.
டயட்டீஷியன் அம்பிகா சேகர்:
உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக 30 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் ஆக்ஸிமெட் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணிபுரிகிறார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.