‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்கிற சமூக வலைத்தளங்களில் நிதி சம்பந்தமான வீடியோ, டிப்ஸ், அறிவுரைகளை வழங்கி வந்தார் ஹரிஷ்.
இவர், உரிய உரிமம் இல்லாமலும், SEBI நிதி ஆலோசகர் (RIA) உரிமம் பெறாமலும் முன்பு வீடியோ செய்திருந்திருக்கிறார்.
சமீபத்தில் ARN எண்ணைப் பெற்றுவிட்டு, முன்னரே AMFI உரிமம் வைத்திருந்ததாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியிருக்கிறார் என்று ஜேசன் சாமுவேல் என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.
தற்கொலை
இதன் பிறகு, ஹரிஷின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மெட்டாவால் முடக்கப்பட்டது.
இதையடுத்து, ஹரிஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜேசன் சாமுவேல் பதிவு
ஹரிஷின் தற்கொலை குறித்து ஜேசன் சாமுவேல், “நடந்த சம்பவத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்.
என் மனம் ஆழ்ந்த துயரத்திலும் சோகத்திலும் உள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
நான் அவரை இணைய வழியில் அச்சுறுத்தவோ அல்லது துன்புறுத்தவோ இல்லை.
அவர் நிதி ஆலோசனை வழங்க உரிய SEBI RIA உரிமம் பெறாதது, மற்றும் சமீபத்தில் தான் ARN எண்ணைப் பெற்றிருந்தும் முன்னரே AMFI உரிமம் வைத்திருப்பதாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியது மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன்.
உண்மையில், எனது வீடியோவில் கூட அவர் முறையான SEBI உரிமத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வந்து பணிகளைத் தொடருமாறு தான் நான் கேட்டுக்கொண்டேன்.
இப்படி ஒரு விபரீதமான முடிவு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை. இந்த இழப்பிற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.