Doctor Vikatan: 35 வயதில் மறதி… டிமென்ஷியா பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

Spread the love

Doctor Vikatan: என் வயது 35. சமீபகாலமாக மிகச் சிறிய விஷயங்களைக்கூட மறந்துவிடுகிறேன். இது  டிமென்ஷியா எனப்படும் ஆரம்பகால ஞாபகமறதி நோயின் அறிகுறியா… இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர்.

நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர்.
நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர்.

35 வயதில் ஞாபக மறதி ஏற்படுகிறது என்றால், பொதுவாக அது ஏதேனும் இரண்டாம் நிலை காரணத்தினால் (Secondary cause) தான் இருக்கும். ஏனெனில், முதன்மை நிலை டிமென்ஷியா (Primary dementia) எனப்படும் தீவிர ஞாபக மறதி நோய், வழக்கமாக 60 அல்லது 70 வயதைக் கடந்தவர்களுக்கே பெரும்பாலும் ஏற்படும்.

இளம் வயதினருக்கு ஞாபக மறதி வருவதற்கு தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு, உடலில் சோடியம் அளவு குறைதல், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் (Neuro-infections), மது அருந்தும் பழக்கம், சில நேரங்களில் மூளையில் ஏற்படும் சிறிய அளவிலான பக்கவாதம் (Mild stroke) போன்ற இரண்டாம் நிலை காரணங்கள் இருக்கலாம்.

இவை தவிர, இன்றைய இளைய தலைமுறையினரிடம் பொதுவாகக் காணப்படும் மன அழுத்தம் (Stress), பதற்றம் (Anxiety) மற்றும் வேலைப் பளு (Work overload) ஆகிய காரணங்களாலும் மனச்சோர்வு ஏற்பட்டு, கவனம் செலுத்தும் திறன் வெகுவாகக் குறைகிறது. 

நமது கவனம் வேறு எங்கோ இருக்கும்போது, மற்றவர்கள்  சொல்வதை நம்மால் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. இதனால், அடுத்த நாள் நாம் ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்போது தடுமாற்றம் ஏற்படும். நமது கவனம் வேறோர் இடத்தில் இருந்ததால், அவர்கள் சொன்னதை நாம் எளிதாக மறந்துவிடுவோம்.

இது பார்ப்பதற்கு ஞாபக மறதி போலத் தெரிந்தாலும், உண்மையில் இது ‘சூடோ டிமென்ஷியா’ (Pseudo dementia ) அதாவது போலி ஞாபக மறதி என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இது உண்மையான ஞாபக மறதி நோய் அல்ல… மனச்சோர்வு, பதற்றம் அல்லது மனச்சோர்வுக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளால், தீவிர ஞாபக மறதி நோய் போன்ற ஒரு தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது.

பேனாவை, சாவியை எங்கு வைத்தோம் என்று தேடுவது, இன்று தேதி என்ன என்பதை மறந்துவிடுவது போன்ற சிறிய அளவிலான மறதி இருந்தால், அதற்குப் பயப்படத் தேவையில்லை.

இருப்பினும், சில நேரங்களில் பேசும்போது வார்த்தைகள் சட்டென்று வராமல் போவது, பேனாவை, சாவியை எங்கு வைத்தோம் என்று தேடுவது, இன்று தேதி என்ன என்பதை மறந்துவிடுவது போன்ற சிறிய அளவிலான மறதி இருந்தால், அதற்குப் பயப்படத் தேவையில்லை.

இத்தகைய சிறிய அளவிலான மறதியை  தினசரி யோகா மற்றும் தியானம் (Meditation) செய்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல், சரியான நேரத்திற்கு உணவருந்துதல் மற்றும் சரியான நேரத்திற்கு உறங்குதல், பழங்கள், காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுதல் போன்ற வாழ்வியல் மாற்றங்களின் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்தலாம்:

ஆனால், இவற்றுக்கும் மேலாக அன்றாட வாழ்வில் மிக அதிகமாகத் தடுமாறுபவர்கள், பணத்தை எங்கு வைத்தோம் என்று முற்றிலும் மறப்பவர்கள், மிக முக்கியமான நிகழ்வுகளைத் தொடர்ந்து மறந்துவிடுபவர்கள் மற்றும் முக்கியமான சந்திப்புகளை நினைவில் வைக்க முடியாமல் திணறுபவர்கள் எனப் பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், அவர்கள்  நரம்பியல் மருத்துவரை (Neurologist) அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். 

ஏனெனில்,  குறிப்பிட்ட சில நோய்கள் இளம் வயதிலும் வரக்கூடும் என்பதால், அவற்றுக்கான உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை மேற்கொண்டால் இதிலிருந்து முழுமையாகக் குணமடைய முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *