“இது எங்க ஏரியா இல்ல. வேற ஸ்டேஷனுக்குப் போங்க!” – அப்படிச் சொல்ல முடியுமா?
இதுதான் நாம் மிக முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!
“இந்தச் சம்பவம் எங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை, அதனால் அங்கே போய் புகார் கொடுங்கள்” என்று சில நேரங்களில் போலீஸ் தரப்பில் உங்களைத் திருப்பியனுப்ப முயலலாம். ஆனால், சட்டம் அப்படிச் சொல்லவில்லை.
BNSS பிரிவு 173(1)-ன் படி, குற்றம் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும்; அந்தக் குற்றத்தின் இடத்தைப் பொருட்படுத்தாமல் , உங்களுக்கு அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் நீங்கள் புகார் அளித்து FIR பதிவு செய்ய முடியும். இதைத்தான் நடைமுறையில் Zero FIR என்று சொல்கிறோம்.
அதாவது, எந்தக் காவல் நிலையத்திற்குப் போவது என்ற குழப்பத்தால் புகார் கொடுப்பதோ அல்லது நீதி பெறுவதோ தாமதமாகக் கூடாது. எந்த ஸ்டேஷனில் தகவல் கொடுத்தாலும், அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு பின்னர் சம்பந்தப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்ட (Jurisdiction) காவல் நிலையத்துக்கு மாற்றி அனுப்பி வைப்பார்களே தவிர, “எங்கள் எல்லை இல்லை” என்று உங்களைத் திருப்பி அனுப்புவது சரியான நடைமுறை அல்ல!
“புகார் கொடுத்த உடனே FIR போடணுமா?” – உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
இங்கேதான் Lalita Kumari v. Government of Uttar Pradesh என்ற முக்கியமான வழக்கு வருகிறது.
இந்த வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கொடுக்கப்பட்ட தகவலில் புலனாய்வு செய்யத்தக்க (cognizable offence) குற்றம் வெளிப்படையாகத் தெரிந்தால், FIR பதிவு செய்வது காவல்துறையின் கட்டாயக் கடமை என்று தெளிவுபடுத்தியது.
ஆனால், தற்போதைய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) பிரிவு 173(3)-ல் ஒரு குறிப்பிட்ட நடைமுறை இருக்கிறது. 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல், ஆனால் 7 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை விதிக்கப்பட்டுள்ள புலனாய்வு செய்யத்தக்க குற்றங்களில் (cognizable offence) , துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பதவிக்குக் குறையாத அதிகாரியின் முன் அனுமதியுடன், சட்டத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முதற்கட்ட விசாரணை (Preliminary Inquiry) நடத்தி, குற்ற முகாந்திரம் (Prima Facie Case) இருக்கிறதா என்று பார்க்கலாம். அந்த விசாரணையில் prima குற்ற முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால், அதன்படி அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.