பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும்போது, டேங்க் நிறைந்தவுடன் எந்தவித மின்சாரக் கருவியோ அல்லது சென்சாரோ இல்லாமலேயே பம்ப் தானாக `க்ளிக்’ என்ற சத்தத்துடன் நின்றுவிடும்.
இதன் பின்னணியில் எந்தவொரு அதிநவீனத் தொழில்நுட்பமும் இல்லை. 18-ம் நூற்றாண்டின் ஒரு சுவாரசியமான இயற்பியல் விதிதான் இது.

இந்தத் தானியங்கி நிறுத்த முறை முற்றிலும் காற்றழுத்த மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்குப் பின்னால் இருக்கும் இயற்பியல் விதியை வெஞ்சுரி விளைவு (Venturi Effect) என்று அழைக்கிறார்கள்.
1797-ல் இத்தாலிய இயற்பியலாளர் ஜியோவானி பாட்டிஸ்டா வெஞ்சுரி என்பவரால் இது கண்டறியப்பட்டது. ஒரு குறுகிய குழாய் வழியாகத் திரவம் அல்லது எரிபொருள் வேகமாகப் பாயும்போது, அங்கே அழுத்தம் குறைந்து ஒரு பகுதி வெற்றிடம் உருவாகும். இதுவே இவ்விதியின் சுருக்கம்.
பம்ப் இயங்கும் முறை:
எரிபொருள் பம்பின் நுனியை உற்று நோக்கினால், அங்கே ஒரு சிறிய துளை இருப்பதை அறியலாம்.
1. காற்று உறிஞ்சப்படுதல்: எரிபொருள் நிரம்பாத நிலை
எரிபொருள் பம்பிலிருந்து வாகனத்தின் டேங்கிற்குள் பெட்ரோல் வேகமாகப் பாயும்போது, அதன் நுனியில் உள்ள சிறிய துளை வழியாக வெளிக்காற்று தொடர்ந்து உள்ளே உறிஞ்சப்படுகிறது. இந்தக் காற்று ஒரு மெல்லிய குழாய் வழியாக பம்பின் கைப்பிடிப் பகுதிக்குச் செல்கிறது.
2. சமநிலை பராமரிப்பு: தொடர் ஓட்டம்
தொடர்ந்து காற்று உள்ளே செல்வதால், கைப்பிடியின் உள்ளே இருக்கும் ஒரு நெகிழ்வான சவ்வு சமநிலையில் இருக்கும். இதனால் பெட்ரோல் வெளியேறும் முக்கிய வால்வு திறந்தே இருக்கும்.

3. துளை அடைபடுதல்: டேங்க் நிறையும் தருணம்
டேங்கில் பெட்ரோல் மட்டம் உயர்ந்து, பம்பின் நுனியில் உள்ள அந்தச் சிறிய துளையைத் தொட்டு மூடும்போது, காற்று உள்ளே செல்வது சட்டென்று தடைபடுகிறது.
4. வால்வு மூடுதல்: க்ளிக் சத்தம்
காற்று செல்வது நின்றுவிடுவதால் பம்பின் கைப்பிடிக்குள் கடுமையான பகுதி வெற்றிடம் உண்டாகிறது. இந்த விசை அங்கிருக்கும் சவ்வை மேல்நோக்கி இழுக்க, அது ஒரு நெம்புகோலை விடுவிக்கிறது. உடனே முக்கிய வால்வு அடைபட்டு பெட்ரோல் வருவது `க்ளிக்’ என்ற சத்தத்துடன் உடனே நின்றுவிடுகிறது.
கூடுதல் தகவல்கள்
* பம்ப் தானாக நின்ற பிறகும், பலர் `ரவுண்ட் அப்’ செய்கிறேன் என்று கூடுதலாகப் எரிபொருள் நிரப்ப முயல்வார்கள். இது மிகவும் தவறானது. காரின் எரிபொருள் ஆவியைக் கட்டுப்படுத்தும் EVAP (Evaporative Emissions) சிஸ்டத்தில் உள்ள விலையுயர்ந்த சார்கோல் கேனிஸ்டருக்குள் இந்த உபரிப் பெட்ரோல் புகுந்து, இன்ஜின் செயல்திறனைப் பாதிக்கும் எனப் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
* இந்தத் தானியங்கி வால்வு பெட்ரோல் சிந்துவதைத் தடுப்பதோடு மட்டுமன்றி, நச்சுத்தன்மை வாய்ந்த பெட்ரோல் காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பெருமளவில் குறைக்கிறது.

மின்சாரமோ, பேட்டரியோ, கணினி அல்லது ஏஐ தொழில்நுட்பமோ இல்லாமல் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எளிய மெக்கானிக்கல் வடிவமைப்பு, இன்றும் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான வாகனங்களில் எரிபொருள் சிந்துவதைத் தடுத்துப் பாதுகாத்துவருகிறது என்றால் வியப்புதான்!