Heat Stroke: வாட்டும் வெயில்; தெலங்கானாவில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் 16 பேர் உயிரிழப்பு!

Spread the love

தெலங்கானா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, இதுவரை 16 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கினால் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹீட் ஸ்ட்ரோக்

மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைச் சூழல் குறித்துத் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீநிவாஸ் ரெட்டி கடந்த சனிக்கிழமை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் 7 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தாண்டி மாவட்ட நிர்வாகங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களின்படி, வெள்ளிக்கிழமை வரை வெயில் கொடுமையால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வெயிலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகப் பயனாளிகளுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தீவிரமாக நிலவி வரும் ‘எல் நினோ’ விளைவு காரணமாகவே மாநிலத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் எவ்வித அலட்சியமும் காட்டக் கூடாது என எச்சரித்தார்.

Heat
Heat

சனிக்கிழமை மாலை நிலவரப்படி மாநிலத்தின் 19 மாவட்டங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைக் கடந்து பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் 46.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

அவசரத் தேவைகள் தவிர்த்து மதியம் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *