திருச்சி கிழக்கு: ரேஸில் பலர்; களமிறங்கும் கு.ப.கிருஷ்ணன் மகன்? – பரபரக்கும் அரசியல் களம்!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க ஆட்சியமைத்ததோடு, அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அவர் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சமீபத்தில், தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்த முதல்வர் ஜோசப் விஜய், ‘திருச்சி கிழக்கு தொகுதியில் சாமானியரை வேட்பாளராக்குவோம்’ என்று தெரிவித்தார்.

trichy east

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போட்டியிட இருக்கிறார் என்ற ஹேஷ்யம் கிளம்பியது. ஆனால், அவர் நேரடி அரசியலில் இறங்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, முன்னாள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா, கு.ப.கிருஷ்ணன், நடிகரும், இயக்குநரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பெயர்கள் அடிப்பட்டன.

இதில், லால்குடி தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவிய கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால், வேட்பாளர் ரேஸில் இருந்து அவர் பெயர் நீங்கியது. இந்நிலையில்தான், திருச்சி கிழக்கு தொகுதியில் கு.ப.கிருஷ்ணனின் மகனான சிரஞ்சீவி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி, தேர்தல் களத்தை சூடாக்கியிருக்கிறது.

இதுபற்றி, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

“கு.ப.கிருஷ்ணன் கடந்த தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டதால், அப்போது அவரது மகன் சிரஞ்சீவி வேட்பாளராக்கப்படவில்லை. ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜோசப் விஜய்க்கு மாற்று வேட்பாளராக சிரஞ்சீவி பெயரைத்தான் குறிப்பிட்டனர். அதோடு, ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதும், அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றதும் சிரஞ்சீவிதான்.

இதற்கிடையில், லால்குடி தொகுதியில் போட்டியிட்ட அவரது தந்தை கு.ப.கிருஷ்ணன் தோல்வியைத் தழுவியதால், அப்போதே திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் சிரஞ்சீவிதான் என்று பேசப்பட்டது.

siranjeevi

இருந்தாலும், சகாயத்தை நிற்க வைக்க நினைத்து விஜய் பலமுறை அவரிடம் பேசியும், அவர் வேட்பாளராக விரும்பவில்லை. இதற்கிடையில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் இந்த தொகுதியை குறிவைத்து சமீபத்தில் த.வெ.க-வில் இணைந்தார். தனக்கு அல்லது தனது மகனுக்கு இந்த தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று அவர் மும்முரம் காட்டி வருகிறார். இந்த சூழலில்தான், தனக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிரஞ்சீவியையே ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக்க முடிவெடுத்துள்ளாராம்” என்றார்கள்.

ஆக, இப்போதே திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடாகியிருக்கிறது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *