‘I Miss You’ யுகத்தில் கட்டுரை வாசிப்பின் அவசியம்! | Redefine Long-Form Reading in the Gen Z Era

Spread the love

காதல் வந்துவிட்டால் போதும் கனவுகள், கற்பனைகள், கவிதைகள் இவைகளுக்கு பஞ்சம் இருக்காது. பக்கம் பக்கமாக காதல் வசனங்கள் பழைய படங்களில் இருக்கும்.

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே…”

-சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற வரிகள் இது. இதெல்லாம் இப்போது கிடையாது. I MISS U என்று சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்…இது GEN Z இளைஞர்கள் கண்டுபிடிப்பு.

“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை…”

-தெய்வத்தின் தெய்வம் படத்தில் இடம்பெற்ற கவியரசர் பாடிய பாடலின் சுருக்கமே I MISS U. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அப்ப கட்டுரைகள் கூடாது என்று சொல்லலாமா…?

‘திருமணம்’ என்ற ஒற்றை வார்த்தை அதற்குள் பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், பத்திரிக்கை அடித்தல், மாமன் விருந்து, பெண்/மாப்பிள்ளை அழைப்பு என்று எத்தனை அழகான விஷயங்கள் அடங்கியிருக்கிறது. பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட வேண்டும். அவ்வளவுதான்…அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் கேள்வி கேட்டுப் பாருங்கள். அதெப்படி…PRE WEDDING PHOTOSHOOT…BACHELOR PARTY… அதை ஒதுக்கி தள்ளிவிடுவார்களா இந்த GEN Z இளைஞர்கள். கட்டுரையும் அதைப் போலத்தான்.

திருமணத்திற்கு பிறகு…கூட்டுக் குடும்பமாக இருந்தால் அது இப்படித்தான் ஒரு அழகான கட்டுரை போல இருக்கும்.

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்…”

பள்ளிப்பருவத்தில் முக்கிய இடம் பிடிப்பது இந்த கட்டுரை தான். தன் வரலாறு கூறுதல் என்ற தலைப்பில் ‘ஆறு, மரம்’ உள்ளிட்ட பல தலைப்புகள் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார்கள் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு தேர்வுகளில்… இன்னொன்று சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். சென்று வந்ததும் அதைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்வார்கள். கட்டுரைகள் நாம் படிக்கும் காலத்தில் இருந்தே நமக்கு தோழனாக/தோழியாக அமைந்துவிடும். கட்டுரைகள் எழுத சொல்லும் ஆசிரியர்கள் கட்டுரைகளுக்கு விமர்சனம் செய்வார்களா…வெகு சிலரே…என்பதுதான் நிதர்சனம்.

தமிழ் இரண்டாம் தாள் ஆங்கிலம் இரண்டாம் தாள் என்ற நடைமுறை இருந்த போது கட்டுரை இரண்டாம் தாளில் இடம்பெறும். விதவிதமான தலைப்புகள் கொடுத்து எழுதச் சொல்வார்கள். தற்போது ஒரே பொதுத்தாளாக இணைக்கப்பட்டு விட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. கட்டுரை எழுதக் சொல்வது தொடர்கிறது.

இயற்கையின் கட்டுரைகளை பார்க்காதவர்கள், படிக்காதவர்கள் உண்டா. தினமும் உதிக்கும் சூரியனை வணங்காதவர் உண்டா. அவரென்ன காலையில் வந்து ‘குட் மார்னிங்’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விடுகிறாரா…காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையில் இருந்து அவர் எழுதுவது ‘வெப்பம், ஒளி’ தொடர்பான கட்டுரை தான். இந்த சூரிய ஒளி இல்லாமல் நம்மால் வாழ முடியுமா…? அவர் பெயரில் ஒரு முக்கியமான கிழமை இருக்கிறதே…’ஞாயிறு’ – மறக்க முடியுமா…அந்த ஓய்வு நாளை…தற்போது அதிகளவில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிடும் பழக்கம் உருவாக காரணமான கிழமை…பல வீடுகளில் அசைவ உணவு சமைக்க காரணமான ஞாயிற்றுக்கிழமையில் இன்னும் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறதே அதை ஒருவரியில் சொல்ல முடியுமா…?’

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *