ஸ்பெயினின் தென்மேற்கு கடல் அமைதியாக கிடந்தது.
வெல்பா (Huelva) கடற்கரை நகரின் வெப்பத்தை தனித்தது குளிர்ந்த காற்று.
1943-ம் ஆண்டு. ஏப்ரல் 30-ம் தேதி காலை நேரம். மீனவர்கள் வலைச் சுமைகளை படகிலிருந்து இறக்கினர். மீன்பாடைப் பொறுத்து அவர்களின் முகத்தில் களைப்பும் மகிழ்ச்சியும்.
கடலுக்குள் சில அடிகள் தூரத்திலிருந்து மீனவர் ஒருவரின் அலறல் சத்தம் திடீரென கேட்டது. கரையில் இருந்த சில மீனவர்கள் கடலுக்குள் மீண்டும் படகைச் செலுத்தினர். அருகில் சென்று பார்த்தால் மனித உடல் ஒன்று மிதந்தது. உடலை கரைக்கு இழுத்து வந்தனர். மீனவர்களும் சுற்றுலாப் பயணிகளும் அந்த உடலைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
பேண்ட்டில் இணைக்கப்பட்டிருந்த சில்வர் சங்கிலியோடு சிறிய பெட்டி (Briefcase) ஒன்றும் உடலோடு சேர்ந்து கிடந்தது. பெட்டியையும் பேண்ட்டையும் இணைத்த சங்கிலி, வெளியே தெரியாத வகையில் தோல் வாரால் இறுக்கமாக நேர்த்தியாக மூடப்பட்டிருந்தது. உப்புத் தண்ணீரில் மூழ்கியதால் பெட்டி கொஞ்சம் உப்பி இருந்தது.

நீரில் மூழ்கி இருந்தவர்களின் உடல் உப்பிப் போய் பார்க்கவே அருவெறுப்பாக இருக்கும். ஆனால் இந்த உடல் சற்று உப்பி இருந்தாலும் இளம் ராணுவ வீரரின் மிடுக்கும் அந்த உடலில் இருந்தது. முகமும் அடையாளங் காணத்தக்க வகையிலேயே இருந்தது. பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி சீருடையில் இருந்தது அந்த உடல். சிலர் இதனை முணுமுணுக்கவும் கூட்டம் பின் வாங்கியது.
சற்று நேரத்தில் அங்கு போலீஸ் வரவும், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வெல்பா கடற்கரை. உடலைக் கைப்பற்றிய போலீஸ் ஸ்பெயின் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தது. உளவுத்துறையினர் உடலை பரிசோதனை செய்தனர்.
பிரிட்டிஷ் கடற்படை மேஜர் வில்லியம் மார்ட்டினின் உடல் என்பது உறுதியானது. பிரிட்டிஷ் கடற்படை வீரர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய செய்தி நாளிதழ்களில் வந்தது. உயர் அதிகாரி என்றோ மேஜர் என்றோ எந்தக் குறிப்பும் அந்தச் செய்திகளில் இல்லை.
இதனிடையே, மாட்ரிட்டில் இருக்கும் பிரிட்டன் தூதரக அதிகாரிகளுக்கும் இந்தத் தகவல் தெரிய வந்தது. பிரிட்டனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஆமாம் ராணுவ வீரர் ஒருவர் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்ததை உறுதிப்படுத்தினர். ஆக, பிரிட்டனுக்குச் சொந்தமான விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஆனால், விமானத்தில் பயணித்தவர் மேஜர் என்றோ அவர் எதற்காக பயணம் மேற்கொண்டார் என்ற தகவலையோ பிரிட்டன் உயர் அதிகாரிகள் சொல்லவில்லை. வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்.
முக்கியமான நபர் என்ற தகவல் வெளியே தெரிந்தால், அது பரபரப்பாகி போர்ச் சூழலை பாதிக்கும். ஒரு விபத்து என்பதாக மூடி மறைக்க பிரிட்டன் உயர் அதிகாரிகள் விரும்பினர். உடலுக்கோ அதோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டிக்கோ எந்த சேதாரமும் இல்லாமல் உடனே உடலை ஒப்படைக்க பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் கோரினர். தருவதாகக் கூறிய ஸ்பெயின் அதிகாரிகள், உடலை உடனே ஒப்படைக்காமல் தாமதப்படுத்தினர்.
இதனிடையே, ஸ்பெயினில் இருந்த ஜெர்மன் தூதரக உளவாளிகளும் இந்தச் செய்தியை மோப்பம் பிடித்துவிட்டனர். ஸ்பெயின் உளவு அதிகாரிகள் சத்தமில்லாமல் ஒரு வேலையைச் செய்தனர். இறந்த பிரிட்டிஷ் கடற்படை மேஜரின் உடலை அப்வேர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது ஃபாசிஸத்திற்கு காட்டிய விசுவாசம்.
இரண்டாம் உலகப் போரில், இரண்டரை அணிகள் சண்டையிட்டன. ஜெர்மன் தலைமையில் அச்சு நாடுகள் ஒரு பக்கம். அவர்களுக்கு எதிராக நேச நாடுகள் எதிர்ப் பக்கம். இந்த இரு அணியிலும் சேராமல் சில நாடுகள் போரை வேடிக்கை பார்த்தன. நடுநிலை வகிப்பதாக சொல்லிக் கொண்ட வேடிக்கை பார்த்த நாடுகள், மறைமுக ஏதாவதொரு அணியை ஆதரிக்கவே செய்தன. அப்படியான ஓர் அரை நாடுதான் ஸ்பெயின். அப்போது ஸ்பெயினில் ஃபாசிச ஆட்சி. எந்தக் கூட்டணியிலும் சேராமல் இருந்தாலும் அரசியல் சார்பு காரணமாக ஹிட்லருக்கே ஆதரவு தந்தது.

அப்வேர் அதிகாரிகள் அந்த உடலை சோதனை செய்தனர். Major William Martin, Royal Marines என்ற அடையாள அட்டையை சீருடையிலிருந்து எடுத்தனர். வங்கி கடன் பாக்கி கடிதம், தியேட்டர் டிக்கெட், விளையாட்டு சங்க உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவை சட்டைப் பையில் இருந்தன. இதெல்லாமே இறந்தவர் லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியது.
அப்வேர் அதிகாரிகளுக்கு புதையல் கிடைத்த மகிழ்ச்சி. இது தங்கப் புதையலாக இருக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு, உடலோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டியை திறந்தனர். அதில் சில கடிதங்கள் இருந்தன. ஒரு கடிதம் அவரின் பயண விவரத்தை வெளிப்படுத்தியது. லண்டனிலிருந்து அல்ஜீரியாவுக்கு சிறிய விமானத்தில் அவர் புறப்பட்டது தெரிய வந்தது. அந்த விமானம்தான் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும்.
அந்தப் பெட்டியில், தந்தையின் கடிதமும் காதலியின் கடிதமும் இருந்தன. Pam என்ற பெயர் கொண்ட காதலி அன்பொழுக கடிதம் எழுதியிருந்தார். திருமண ஏற்பாடுகள், சொத்து உயில் கவலைகளை தெரியப்படுத்தியது தந்தையின் கடிதம். அதில் ஓர் இளம் பெண்ணின் புகைப்படமும் நிச்சயதார்த்த மோதிரமும் இருந்தது. இளம் ராணுவ வீரருக்கு விரைவில் திருமணம் போல. அப்வேர் அதிகாரிகள் அவரின் அகால மரணத்துக்காக எள்ளலுடன் பரிதாபப்பட்டனர்.
இன்னொரு கடிதமும் அதில் இருந்தது. அதைப் பார்த்ததும்தான் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதாக உணர்ந்தனர். பிரிட்டிஷ் கடற்படை முத்திரை குத்தப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் அது. கடற்படை உளவுத்துறையின் தலைவர் அட்மிரல் ஆர்ச்சிபால்ட் நையே, அல்ஜீரிய தலைநகர் அல்ஜீயர்ஸில் உள்ள நேச நாட்டுப் படைகளின் கமாண்டர் ஜெனரல் ஹரோல் அலெக்ஸாண்டருக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
“நேச நாட்டு படைகள் கிரீஸ் மற்றும் சார்டினியாவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளன, சிசிலியை அல்ல. அது ஏமாற்றுதிட்டம்.” இதுதான் அந்தக் கடிதத்தில் இருந்த அதி உயர் ரகசிய தகவல். கடிதத்தை கொண்டு செல்லும் வழியில்தான் விமானம் கடலில் விழுந்து இளம் ராணுவ அதிகாரி உயிரை விட்டிருக்கிறார்.

எவ்வளவு முக்கியமான தகவல் இது. அதுவாகவே நம் கைகளில் வந்து சிக்கி விட்டது. எதிரிகள் அனைவரும் தங்கள் துப்பாக்கிகளால் தங்களையே சுட்டுக் கொண்டு செத்து மடிவதற்குச் சமமல்லவா இது! அப்வேர் அதிகாரிகள் உற்சாகத்தில் குதித்தனர். இருந்தாலும் இது ஏமாற்று வேலையாகவும் இருக்கலாம் என அவர்களின் உளவு மூளை சந்தேகித்தது.
கடிதத்தில் ஒட்டப்பட்டிருந்த பசை, எழுதப்பட்டிருந்த மை, பிரிட்டன் ராணுவ பயன்பாட்டுக்கான காகிதத்தின் உண்மைத் தன்மை (British Admiralty Watermark), கடிதத்தில் இருந்த மடிப்புகள், ஓரங்கள், ஊறியிருந்த தண்ணீரின் உப்புத் தன்மை என அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தனர். இறுதியில் அப்வேர் அதிகாரிகள் உறுதி செய்தனர்: விமான விபத்தில் இறந்தவர் பிரிட்டிஷ் கடற்படை மேஜர்தான். அவர் கொண்டு போன தகவலும் உண்மைத் தகவல்தான்.
மேஜர் வில்லியம் மார்ட்டினின் உடலை, பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டனர். மே 2-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு, வெல்பா கல்லறையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். தாய்நாட்டிலிருந்து கப்பற்படை அதிகாரிகள் யாரும் இறுதிச் சடங்குக்கு வரவில்லை. சவப் பெட்டியில் Union Jack கொடி போர்த்தப்பட்டு, இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்வேர் அதிகாரிகள், மேஜர் வில்லியம் மார்ட்டினின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். ஸ்பெயினின் தடயவியல் மருத்துவர் ஒருவர் உடற்கூராய்வு செய்து அறிக்கை அளித்தார். உடலில் எந்தக் காயங்களோ, துப்பாக்கிச் சூட்டின் தடயங்களோ இல்லை; தண்ணீரில் மூழ்கியதால் மூச்சு திணறி இறந்ததாக உடற்கூராய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, அதாவது ஆறு மாதங்களுக்கு முன்புதான், நேச நாட்டுப் படைகள் வட ஆஃப்ரிக்க பகுதிகளைத் தாக்கின. எட்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் ஃபிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த மொராக்கோ, அல்ஜீரியா விடுவிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளுக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. வெற்றி தந்த ஊக்கத்தில், நேச நாட்டுப் படைகள் அடுத்ததாக சிசிலி மீதே குறிவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தோல்வியைத் தழுவிய ஃபியூரர் ஹிட்லரின் கவனம் முழுக்க இப்போது சிசிலி மீது இருந்தது. இந்த முறை தோற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். சுமார் மூன்று லட்சம் இத்தாலிய வீரர்கள் சிசிலியில் தயார் நிலையில் இருந்தனர். படையெடுப்பை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தது ஜெர்மனியின் விமானப் படை.
இப்போது, பிரிட்டிஷ் கடற்படை மேஜரின் இறந்த உடல் மூலம் கிடைத்த தகவல் எதிரிகளின் ரகசிய திட்டத்தை வெளிப்படுத்தியது. சிசிலி தாக்குதல் என்பது ஏமாற்று உத்தி என்பது திட்டவட்டமாக தெரிந்தது. கடலில் மிதந்த உடல் மற்றும் அவரோடு கிடைத்த தகவல்கள் குறித்த சந்தேகங்கள் அனைத்தும் முழுமையாகத் தீர்ந்ததால், அப்வேர் அதிகாரிகள் ஃபியூரருக்கு தகவல் அனுப்பினர்.
“கிரீஸுயும் சார்டினியாவுமே அடுத்த குறி. நேச நாட்டுப் படைகள் தயாராகி வருகின்றன. சிசிலியில் தாக்குதல் என போலியான தகவல் நமக்கு கிடைக்கும்படி செய்தனர்.” மேஜரின் இறந்த உடலுடன் கிடைத்த கடிதத்தின் புகைப்படத்தையும் தகவலுடன் சேர்த்து அனுப்பினர். மே 9-ம் தேதி ஹிட்லரின் கைகளின் இந்தக் கடிதம் கிடைத்தது.
கடிதத்தை படித்து புன்முறுவல் பூத்த ஹிட்லர், தளபதிகளை அழைத்து குதூகலத்தை வெளிப்படுத்தினார். “என் உள்ளுணர்வு சரியாகத்தான் இருந்திருக்கிறது. கிரீஸைத்தான் அவர்கள் தாக்குவார்கள் என எதிர்பார்த்தேன். பிரிட்டிஷ் முட்டாள்கள் முக்கியமான ரகசியத்தை நம் கைகளிலேயே கொண்டு வந்து சேர்த்து விட்டனர். ஒரு பிணத்தின் மூலம்…” பிரிட்டிஷ் கடற்படை மேஜர் விமான விபத்தில் உயிரிழந்த விவகாரத்தை தளபதிகளுக்கு விவரித்தார்.
படைகள் கிரீஸை நோக்கி நகர்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகின. கிரீஸ் தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், பிரிட்டன் அப்வேர் உளவாளி கார்போவிடம் இருந்து இன்னொரு செய்தி வந்தது. “நேச நாட்டுப் படைகளின் அடுத்த குறி கிரீஸாக இருக்க வாய்ப்புள்ளது. சார்டினியா பகுதிக்கும் ஓரிரு நாட்களில் படைகள் நகரும்.”

நார்வேயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலிலிருந்து பெர்லின் தலைமையகத்துக்கு, கார்போவின் தகவல்களை அப்வேர் அனுப்பியது. ப்ளெட்ச்லே பூங்காவில் செயல்பட்டு வந்த பிரிட்டன் உளவுத்துறையின் குறியீட்டு உடைப்பு அணியினர் கார்போவின் தகவல்களை இடைமறித்து கேட்டனர். அப்போது அந்த அலுவலகத்தில் அமர்ந்திருந்த கடற்படை உளவு அதிகாரி ஈவன் மாண்டேகு உதட்டைப் பிதுக்கி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.