IND Vs NZ: “கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம்!” – தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்!| IND vs NZ: Shreyas Iyer Admits “We Were a Bit Careless” After Defeat

Spread the love

முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 191 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்தின் அதிரடியைச் சமாளிக்க முடியாத நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்துப் மனம் திறந்திருக்கிறார் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.

இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் செயல்பாட்டில் இருந்த குறைகளைச் சுட்டிக்காட்டிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “உண்மையில், நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். இஷான் கிஷனும் நானும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினோம். அணியின் ரன் வேகத்தையும் உயர்த்தினோம். ஆனால், அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இதனால் புதிதாகக் களமிறங்கிய வீரர்களுக்குத் திடீரென அழுத்தம் ஏற்பட்டது. அந்தச் சூழலை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும்.

ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பந்துகள் சில நேரங்களில் வேகம் குறைந்தும், சில நேரங்களில் வேகமாகவும் வந்தன. திலக் வர்மாவும் நானும் ஒரே மாதிரியான பந்துகளில் ஆட்டமிழந்தோம். குறிப்பாக, கடினமான நீளத்தில் வீசப்பட்ட பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. இருப்பினும், 194 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர்தான். ஆனாலும், இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்” என்றார்.

“பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை!”

தொடர்ந்து அணியின் பந்துவீச்சு, பீல்டிங் குறித்துப் பேசியவர், “பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம். குறிப்பாக, பீல்டிங் என்பது நாங்கள் முன்னேற்றம் காண வேண்டிய ஒரு பகுதி. இதுகுறித்து அணியினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து, சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவுக்கு வெளியே விளையாடும்போது வெவ்வேறு மைதானங்கள், சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் எங்களுக்குச் சாதகமான சூழல் அமைந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு எங்களை நாங்களே சவாலுக்கு உட்படுத்திக்கொள்ள விரும்பினோம். இன்றைய போட்டியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், இது எங்களுக்குச் சிறந்த கற்றல் அனுபவம்.

இந்தியாவில் அதிகம் கிடைக்காத இரவு நேர வெளிச்சம், தெளிவான வானம் போன்ற சூழல்களில் விளையாடுவது எளிதல்ல. அதுவும் எங்களுக்கு ஒரு புதிய அனுபவம்தான். மைதானத்துக்கு வந்த ரசிகர்களின் ஆதரவு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. அவர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *