
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 புரோ சீரிஸ் மற்றும் தனது முதல் மடிப்பு போனான ‘ஐபோன் டூயோ’ (iPhone Duo) ஆகியவற்றை நேற்று (செப்.9) இரவு அறிமுகப்படுத்தியது. வழக்கமாகப் புதிய ஐபோன்கள் அறிமுகமாகும் போது, பழைய மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை அதற்கு மாறாகப் பழைய மாடல்களின் விலையை உயர்த்தி ஐபோன் பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
ஐபோன் 17 விலை அதிரடி உயர்வு
இம்முறை Base மாடல் ஐபோன் 18 மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படாததால், சந்தையில் ஐபோன் 17 மாடலே முதன்மை மாடலாகத் தொடர்கிறது. இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் 17-ன் விலை ரூ.17,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ரூ.82,900-க்கு அறிமுகமான இதன் 256GB வேரியண்ட் தற்போது ரூ.99,900 என்றும், 512GB வேரியண்ட் ரூ.1,24,900 என்றும் மாற்றப்பட்டு, உடனடியாக விற்பனைக்கு வந்துள்ளது.
பிற மாடல்களின் விலை உயர்வு
ஐபோன் 17 மட்டுமின்றி, ஐபோன் 17e விலை ரூ.15,000 உயர்த்தப்பட்டு ரூ.79,900-ஆகவும், ஐபோன் 16 விலை ரூ.89,900-ஆகவும் அதிகரித்துள்ளன. இதில் ஐபோன் ஏர் (iPhone Air) மாடல் அதிகபட்சமாக ரூ.30,000 உயர்த்தப்பட்டு ரூ.1,49,900-க்கு விற்பனையாகிறது. புதிய புரோ மாடல்கள் அறிமுகமானதால், ஐபோன் 17 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல்களின் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. இருப்பினும், இவை கையிருப்பில் இருக்கும் வரை பிற சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கும்.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
உலகளவில் நிலவி வரும் ரேம் (RAM) மற்றும் மெமரி சிப் தட்டுப்பாடே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகத் தரவு மையங்களுக்கு அதிக அளவில் மெமரி தேவைப்படுவதால், அதன் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஆண்ட்ராய்டு போன்களையும் பாதித்துள்ள நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்தையும் தாக்கியுள்ளது.
சிறப்பம்சங்களில் மாற்றமில்லை
விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் போனின் சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஐபோன் 17 மாடல் அதே 6.3 இன்ச் திரை (120Hz), ஏ19 சிப் (A19 chip), 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 30 மணி நேர பேட்டரி ஆயுள் ஆகிய பழைய அம்சங்களுடனே தொடர்கிறது.