தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில், “பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் இந்த ஏஐ மார்பிங் கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது. இது ஏதோ ஒரு தனிநபரின் பிரச்னை மட்டுமல்ல. தெலுங்குத் திரையுலகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று இது வேறு ஒருவருக்கு நடந்துள்ளது, நாளை உங்களுக்கோ, எனக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நடக்கலாம். நமக்கு நேரடி பாதிப்பு வரவில்லை என்பதற்காக நாம் அமைதியாக இருக்கக் கூடாது.

இது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச மற்றும் அவதூறு உள்ளடக்கங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ சிறப்புத் தனிக்குழு மற்றும் உதவி மையத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய வீடியோக்களை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றை வேண்டுமென்றே பரப்புபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இணையக் குற்றப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து இந்த வீடியோக்களை இணையத்திலிருந்து நீக்கவும் சட்டப் பூர்வமாக எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.