பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமருக்காக லண்டன் 10 டவுனிங் தெருவில் இருக்கும் பிரதமர் இல்லம் காத்திருக்கிறது. அந்த வீட்டில் வாசலில் 7-வது பிரதமரைப் பார்க்க ஒரு பூனையும் காத்திருக்கிறது.
10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வசித்து வரும் சாம்பல் மற்றும் வெள்ளை நிற வரிகளைக் கொண்ட லேர்ரி பூனை, பல ஆண்டுகளாக பிரிட்டன் அரசியலின் மிக முக்கிய அங்கமாகவும், உலகளவில் அடையாளம் காணப்பட்ட ஒரு சின்னமாகவும் மாறியுள்ளது.
பிரிட்டனின் புகழ்பெற்ற “பாட்டர்சி நாய் மற்றும் பூனைகள் காப்பகத்தில்’ (Battersea Dogs & Cats Home) இருந்து கடந்த 2011-ம் ஆண்டு மீட்கப்பட்டு, எலிகளைப் பிடிக்க டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்திற்குள் அழைத்து வரப்பட்டது லேர்ரி பூனை.
அன்று முதல் இன்று வரை டேவிட் கேமரூன், தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக், தற்போது கீர் ஸ்டார்மர் உட்பட ஆறு பிரிட்டிஷ் பிரதமர்களின் ஆட்சிப் காலத்தைக் கடந்து, அங்கு ஒரு நிரந்தர அரசியல் அங்கமாகவே இப்போதும் அந்தப் பூனை அங்கேயே இருக்கிறது.
உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பிரதமர் இல்லத்திற்கு வரும் முக்கியப் பிரமுகர்களுடன் அடிக்கடி புகைப்படங்களில் தோன்றும் லேர்ரி பூனை, இப்போதும் பிரிட்டன் அரசியல் மாற்றத்தின் ஒரு மௌன சாட்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.