பிற பேருந்து செயலியிலிந்து மக்கள் பஸ் செயலி எவ்வாறு வேறுபடுகிறது?
“தமிழ்நாட்டில் பெருநகரங்களையும், நகரங்களையும் இணைக்கிற மாதிரிதான் பேருந்து செயலிகள் இருக்கு. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நகரத்திற்கும் நகர்ப்புற பேருந்து செயலி இருக்கிறதா என்றால் சென்னை, பெங்களூரு என விரல் விட்டு எண்ணி விடலாம். அதற்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் மதுரை என்ற தொலைநோக்குப் பார்வையிலேயே இந்தச் செயலியை மதுரை மக்களுக்காக நான் உருவாக்கியிருக்கிறேன்.”
இந்தச் செயலியை உருவாக்கும்போது சந்தித்த சவால்கள் என்னென்ன?
“நானொரு கல்லூரி மாணவர். ஆரம்பத்தில் என்னிடம் மடிக்கணினி இல்லை. செயலி உருவாக்குவது பற்றிய அடிப்படை மட்டும்தான் தெரியும். பிறகு, அதற்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொண்டேன். ‘பிளட்டர்’ எனும் கூகுளின் மென்பொருளைக் கற்றுக்கொண்டு, அதன் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளேன். இதுபோல இருக்கக்கூடிய செயலிகளுக்கு முக்கியமான தேவை என்றால், அது சரிபார்க்கப்பட்ட துல்லியமான தகவல்கள்தான். அந்தத் தகவல்களைத் திரட்டுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.
பெரியார் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்றே தகவல்களைத் திரட்டினேன். தொடர் பேருந்து பயணம் செய்யக்கூடிய, வழித்தடத்தில் அனுபவமிக்க பயணிகள் மூலம் தகவல்களைப் பெற்று மென்பொருள்களின் உதவியோடு சரிபார்க்கப்பட்டு பயன்படுத்த என கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன.”
கல்லூரிப் படிப்பையும் செயலி உருவாக்கத்தையும் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்?
“ஒரு கல்லூரி மாணவராக படிப்பில் இருக்கும் ஆர்வம் அதிகம்தான். அதையும் தாண்டி கல்லூரி நேரத்திற்குப் பிறகு எனது சுயவிருப்பத்தின்படி, நான் சந்தித்த பிரச்னையை வைத்து உருவாக்கியதே இந்த மக்கள் பஸ் செயலி. அதனால் மேனேஜ் என்பதைத் தாண்டி ஆர்வம் அதிகமாக இருக்கிறது.”