என்னுடைய அப்பா, அம்மா, சகோதரி மூன்று பேரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அலுவலக வேலைக்கும் பிசினஸுக்கும் இடையே நேரத்தைச் சமாளிக்க அவர்களுடைய உதவியும், நண்பர்களுடைய ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது” என்கிறார் கண்ணன்.
ஐ.டி-யில் கிடைக்கும் திருப்தி வேறு… பேக்கிங்கில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு!
“ஐ.டி வேலையில் ஒரு பணியை வெற்றிகரமாக முடிக்கும்போது ஒரு விதமான திருப்தி கிடைக்கும். ஆனால், பேக்கிங்கில் நம்ம கைகளால் செய்த ஒரு பொருளை வாடிக்கையாளர் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சந்தோஷமாகச் சிரிக்கும்போது கிடைக்கும் திருப்தி வேறு.
குறிப்பாக, ஒரு பிறந்தநாள் அல்லது திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுக்காக நாம் தயாரித்த கேக் ஒருவருடைய மகிழ்ச்சியான தருணத்தில் இடம்பெறும்போது மனதுக்கு ரொம்பப் பூரிப்பாக இருக்கும். அதனால்தான் பேக்கிங்கை நான் வெறும் சைட் பிசினஸாகப் பார்க்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.
“எங்கள் பிரௌனியின் ரகசியப் பொருள்… அன்பு!”
தன்னுடைய தயாரிப்புகளின் சிறப்பு குறித்து அவர் கூறுகையில், “எங்களுடைய பிரௌனியில் பெரிய ரகசியப் பொருள்களெல்லாம் எதுவும் கிடையாது. எப்போதும் பிரெஷ்ஷான பொருள்கள், நல்ல தரம், சுத்தமாகத் தயாரிப்பது, பதப்படுத்திகள் மற்றும் தேவையற்ற ரசாயனங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துகிறோம்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி, நான் ஒவ்வொரு முறை பிரௌனி செய்யும்போதும் அதில் கொஞ்சம் கூடுதல் அன்பு கலந்து கொடுக்கிறேன். ஒரு வாடிக்கையாளர் நம்ம பிரௌனியை ருசித்துப் பார்த்துவிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தேடி வந்து ஆர்டர் செய்கிறார் என்றால், அதுதான் எங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பாராட்டு” என்கிறார்.