Micheal: மேஜிக் ஷூ ரகசியம்; ஸ்பைடர் மேனாக நடிக்க ஆசை – மைக்கேல் ஜாக்சன் பற்றி அறிந்திடாத தகவல்கள்!

Spread the love

ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் ‘தி ஈக்குவலைசர்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆண்டனி ஃபுகுவா, இப்போது மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான ‘மைக்கேல்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Micheal Jackson Biopic
Micheal Jackson Biopic

இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சனாக அவருடைய அண்ணன் மகனான ஜாஃபர் ஜாக்சன் நடித்திருக்கிறார்.

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில், அவரைப் பற்றிப் பெரியளவில் அறியப்படாத சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து:

1984-ம் ஆண்டு ‘பெப்சி’ குளிர்பான விளம்பரப் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் மைக்கேல் ஜாக்சனின் தலைமுடியில் தீப்பற்றியது. அப்போது அவருடைய தலையில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் தலையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டது. தனது பிந்தைய காலங்களில் அவர் விக் பயன்படுத்தத் தொடங்கியதற்குக் காரணமும் இந்த விபத்துதான்.

அந்த மாயாஜால நடனத்தின் ரகசியம்:

‘ஸ்மூத் கிரிமினல்’ (Smooth Criminal) பாடலில் மைக்கேல் ஜாக்சன் சாய்ந்து ஆடும் நடனத்திற்குப் பின்னால் எந்தவொரு கேமரா தந்திரங்களும் கிடையாது. இதற்காக அவர் ஒரு பிரத்யேக ஷூவை வடிவமைத்தார். அந்த ஷூ மேடையுடன் லாக் ஆகி, அவர் கீழே விழாமல் சாய்ந்து ஆட உதவியது.

Micheal Jackson at Cannes Film Festival
Micheal Jackson at Cannes Film Festival

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தை வாங்க விரும்பிய மைக்கேல் ஜாக்சன்:

1990-களின் இறுதியில் ‘மார்வெல்’ காமிக்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நேரத்தில் மைக்கேல் ஜாக்சன் அந்நிறுவனத்தை வாங்கத் தீவிரமாக முயன்றார். அந்த காமிக்ஸ் நிறுவனத்தை வாங்கி, லைவ் ஆக்ஷன் திரைப்படத்தில் ‘ஸ்பைடர் மேன்’ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, நிறைவேறாமல் போனது.

கறுப்பு நிறத்தை மைக்கேல் ஜாக்சன் வெறுத்தாரா?

கறுப்பு நிறத்தின் மீது வெறுப்புக் கொண்டு மைக்கேல் ஜாக்சன் தனது நிறத்தை மாற்றிக்கொண்டார் என இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அவருக்கு ‘விடிலிகோ’ (Vitiligo) எனும் தோல் நோய் இருந்திருக்கிறது. அவரின் மரணத்திற்குப் பின் நடந்த உடற்கூறாய்வில் இந்த நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தோலில் ஆங்காங்கே ஏற்பட்ட வெள்ளை திட்டுக்களைத் சீராகக் காட்டுவதற்கே அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காகவும், இசைத்துறைகளில் அவர்களுக்கு சமமான உரிமை கிடைத்திடவும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

Micheal Jackson - Chimpanzee
Micheal Jackson – Chimpanzee

தனிமையைப் போக்க மனிதச் சிலைகள்:

கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் மைக்கேல் ஜாக்சன் அதிகமாகத் தனிமையைத்தான் அனுபவித்திருக்கிறார். அந்தத் தனிமையைப் போக்க அவருடைய பண்ணை வீட்டில் நிஜ மனிதர்களைப் போலவே இருக்கும் சிலைகளை (Mannequins) ஒரு அறை முழுவதும் வைத்திருந்தார். அந்தச் சிலைகள் மனிதர்கள் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருவதாக ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

மைக்கேல் ஜாக்சனின் சிம்பன்சி :

மைக்கேல் ஜாக்சனின் செல்லப் பிராணியான ‘பப்பிள்ஸ்’ (Bubbles) எனும் சிம்பன்சி, அவர் எங்கு சென்றாலும் அவருடனேயே செல்லும் உற்ற துணையாக இருந்தது. இன்று அந்தச் சிம்பன்சி, ‘சென்டர் ஃபார் கிரேட் ஏப்ஸ்’ (Center for Great Apes) எனப்படும் குரங்குகள் காப்பகத்தில் இருக்கிறது. இதற்கு இப்போது 43 வயதாகிறது.

புத்தகக் காதலன் மைக்கேல் ஜாக்சன்:

மைக்கேல் ஜாக்சனுக்குப் புத்தகங்கள் வாசிப்பதன் மீது அலாதி காதல். அவருடைய பண்ணை வீட்டில் 10,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை அவர் அமைத்திருந்தார். அதுமட்டுமல்ல, பொது நூலகங்களுக்குப் புத்தகங்களைத் தானமாகவும் அவர் கொடுத்திருக்கிறார்.

Micheal Jackson - Grammy Awards
Micheal Jackson – Grammy Awards

ஒரே மேடையில் 8 விருதுகள்:

1984 கிராமி விருதுகளில் ஒரே இரவில் 8 விருதுகளை வென்று சாதனை படைத்தார். அவர் தனது வாழ்நாளில் மொத்தம் 13 கிராமி விருதுகளை வென்றுள்ளார். 1993-ல் அவர் பங்கேற்ற சூப்பர் பவுல் நிகழ்ச்சி இன்றும் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அவர் ஊதியம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ‘Heal the World’ அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் அதற்கான விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *