அழகுக்கு அப்பால்… அறிவும் சமூக அக்கறையும்!
அழகிப் போட்டிகளில் முன் அனுபவமே இல்லாமல் 2025-ஆம் ஆண்டில்தான் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார் ஜெனிஃபர். ஆய்வு உளவியலில் இளங்கலைப் பட்டமும், உளவியல் மற்றும் மருத்துவச் சமூகப்பணியில் முதுகலைப் பட்டங்களும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, ராணுவக் குடும்பங்களின் நலனுக்கான சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இறுதிக் கேள்வியில் வெளிப்பட்ட சிந்தனை!
இறுதிச்சுற்றில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு மத்தியில் மனிதர்கள் இழக்கக் கூடாத மதிப்பு எது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெனிஃபர், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதன் அவசியத்தையும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையே நேர்மை இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இந்தியாவுக்கு முதல் 30 இடங்கள்!
இறுதிப்போட்டியில் டொமினிக்கன் குடியரசின் மெலிசா நூனெஸ் முதல் ரன்னர்-அப் இடத்தையும், வெனிசுலாவின் கிளாரா வேகாஸ் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய காசியா லிஸ் மேஜோ முதல் 30 இடங்களுக்குள் நுழைந்தாலும், முதல் 12 இடங்களுக்குள் செல்ல முடியவில்லை.
18 காரட் வெள்ளைத் தங்கத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட மகுடம் ஜெனிஃபருக்கு அணிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் போர்ட்டோ ரிக்கோ ஆறாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருக்கிறது.
ஒரு காலத்தில் அழகிப் போட்டிகளுக்கென்று இருந்த வரையறைகள் இன்று மாறியிருக்கின்றன. திருமணம், தாய்மை ஆகியவை ஒரு பெண்ணின் கனவுகளுக்குத் தடையல்ல என்பதை உலக மேடையில் நிரூபித்திருக்கிறார் ஜெனிஃபர். மகுடம் அவரது தலையில் சூட்டப்பட்டிருக்கலாம்… ஆனால், அவர் திறந்திருப்பது பல பெண்களின் கனவுகளுக்கான புதிய கதவு!