International
oi-Hema Vandhana
நியூயார்க்: அமெரிக்காவில் 29 வயது பெண் ஒருவர் செய்துள்ள சாதனை மொத்த பேரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது… ஏன் தெரியுமா? வெறும் 10 நாட்களில் 60 மலைப்பாம்புகளை பிடித்துள்ளாராம்.. அதுவும் சாதாரண இடங்களில் அல்ல. ஆபத்தான பாம்புகள் வாழும் சேறும் தண்ணீரும் நிறைந்த பகுதிகளில் இறங்கிப் பிடித்துள்ளார்… யார் இந்த பெண்? அவருக்கு ஏன் பாம்புகளைப் பிடிக்கும் வேலை? டைம்ஸ் ஆப் இந்தியா இன்று இவரை பற்றின கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதனை இங்கே சுருக்கமாக பார்ப்போம்…!!
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பகுதியில் ஆண்டுதோறும் மலைப்பாம்புகளைப் பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.. இங்கு 2025-ம் ஆண்டு நடந்த போட்டியில் 29 வயதான டெய்லர் ஸ்டான்பெரி கலந்து கொண்டார். போட்டி நடந்த 10 நாட்களில் 60 பர்மிய மலைப்பாம்புகளைப் பிடித்தார். இதில் 33 பெண் பாம்புகள். 27 ஆண் பாம்புகள்.

கைகளாலேயே பாம்பு பிடித்து..
இதன் மூலம் இந்தப் போட்டியில் முதல் பரிசு வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசாகக் கிடைத்தது.. டெய்லரின் கணவர் பெயர் ரெட் ஸ்டான்பெரி. அவரும் பாம்புகளைப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.. 2 பேருமே சேர்ந்துதான் புளோரிடாவில் உள்ள எவர்கிளேட்ஸ் என்ற சதுப்பு நிலப் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்..
அங்கு படகில் சென்று இரவு நேரங்களில் பாம்புகளை தேடியுள்ளனர். இருட்டில் பாம்புகளை கண்டுபிடிக்க விளக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.
சேறும் தண்ணீரும் நிறைந்த பகுதிகளில் இறங்கியும் பாம்புகளைப் பிடித்துள்ளனர். சில நேரங்களில் வெறும் கைகளாலேயே பாம்புகளை பிடித்துள்ளார் டெய்லர். அதிலும் ஒரே இடத்தில் சுமார் 30 குட்டி மலைப்பாம்புகள் இருந்த கூட்டைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கூட்டில் பாம்புகளின் முட்டைகளும் இருந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து பிடிப்பதற்கு மட்டும் சுமார் 2 மணி நேரம் ஆகியுள்ளது. மொத்தத்தையும் லட்டு போல அள்ளியிருக்கிறார் டெய்லர்..
டெய்லர் தம்பதி சாதனை
பாம்புகளைப் பிடிப்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. சில நாட்களில் 12 மணி நேரம் வரை தேடியும் ஒரு பாம்புகூட கிடைக்கவில்லை. ஆனாலும் டெய்லர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. அவருக்கு பாம்புகளைப் பிடிப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது… ஆனால், பாம்புகளை தேடி தேடி பிடிக்கும் டெய்லருக்கு, அதை கொல்வது மட்டும் பிடிக்காதாம்..
எனினும் இப்படி பாம்புகளை டெயிலர் பிடிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது.. புளோரிடாவில் இயற்கையாக வாழும் முயல்கள், பறவைகள், ரக்கூன்கள் போன்ற உயிரினங்களுக்கு பர்மிய மலைப்பாம்புகள் பெரிய ஆபத்தாக இருக்கின்றன. இந்த மலைப்பாம்புகள் புளோரிடாவைச் சேர்ந்தவை கிடையாது. ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பாம்புகள் புளோரிடாவில் அதிகமாகப் பரவியுள்ளன.
60 மலைப்பாம்புகள் பிடித்து சாதனை
இவை அங்குள்ள முயல்கள், ரக்கூன்கள், பறவைகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களை வேட்டையாடி சாப்பிடுகின்றன. இதனால் அங்கு இயற்கையாக வாழும் மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அந்த சின்னஞ்சிறு உயிரினங்களை காப்பாற்றவும், இந்தப் பாதிப்பைத் தடுக்கவும், மலைப்பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் இந்தப் போட்டி வருடா வருடம் நடத்தப்படுகிறது.
எனவே, முதன்முதலாக இந்த போட்டியில் டெயிலர் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டதுடன், 10,000 டாலரையும் வென்றுள்ளார்.. பாம்புகளைப் பிடிப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர் டெய்லர்.. அதனால் முதல்முறை போட்டியில் கலந்து கொண்டாலும், அசால்ட்டாக பரிசையும் வென்றுவிட்டார்.
விலங்குகள் காப்பகம்
ஆனால், இந்த பணத்தை தனது சொந்த செலவுக்கு அவர் பயன்படுத்தவில்லை… அமெரிக்காவின் நேபிள்ஸ் பகுதியில் கணவருடன் சேர்ந்து விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த காப்பகத்தில் இன்னும் பல விலங்குகளைப் பராமரிக்க வசதிகளை அதிகரிக்க வேண்டியிருப்பதால், அதற்கு தன்னுடைய பரிசு பணத்தை பயன்படுத்தியுள்ளார்.
10 நாட்களில் 60 மலைப்பாம்புகளைப் பிடித்து சாதனை படைத்ததுடன், கிடைத்த பரிசுப் பணத்தையும் விலங்குகளுக்காகச் செலவிட்டுள்ளார் டெய்லர் ஸ்டான்பெரி…
டெய்லர் ஸ்டான்பெரியின் சாதனைக்கு பின்னாலுள்ள இந்த சுவாரஸ்யமான கதையைதான் “டைம்ஸ் ஆப் இந்தியா” இன்றைய தினம் கட்டுரையாக வெளியிட்டு, பலரையும் ஈர்த்துள்ளது..!!!

