Cricket
oi-Mani Singh S
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார். வரும் 2027 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார் என அணி நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்த தோனி, முதல் முறையாக சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய சுவாரசிய பின்னணியை பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் பிளேயரான தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சென்னை அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் தோனி, இடையில் சூதாட்ட சர்ச்சையில் சிஎஸ்கேவுக்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டபோது மட்டும் புனே அணிக்காக விளையாடினார்.

இனி சிஎஸ்கே ஆலோசகராக தோனி
அதன் பிறகு மீண்டும் சிஎஸ்கேவுக்கே தோனி திரும்பினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 15 ஆண்டுகள் வரை இருந்தவர் 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய தோனி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெறும் வீரராக விளையாடி வந்தார்.
இந்த நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை அணியில் அவர் வீரராக விளையாடிய காலம் முடிவுக்கு வந்தது உறுதியாகியுள்ளது. 45 வயதான தோனி, ஐபிஎல் தொடரில் 272 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தோனி தேர்வானது எப்படி?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டு பிசிசிஐயால் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக ஆண்டில் நட்சத்திர வீரர்களை அணிகள் ஏல முறையில் அல்லாமல் ஐகான் பிளேயர் என்ற முறையில் எடுத்துக்கொண்டன. அதாவது சச்சின் டெண்டுல்கரை அவரது சொந்த ஊரான மும்பை அணி எடுத்துக்கொண்டது.
சவுரவ் கங்குலியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சேவாக்கை டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராகுல் டிராவிட்டை பெங்களூர் அணியும் எடுத்துக்கொண்டன. விவிஎஸ் லட்சுமன்ணை ஐதரபாத் அணி எடுத்துக்கொண்டது. அப்போது சென்னை அணிக்காக பெயர் சொல்லும் வீரர்களை யாரையும் ஐகானிக் பிளேயர் என எடுக்க முடியாமல் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன், சேவாக்கை தனது அணிக்கு எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்.
சேவாக், தோனியை எடுக்க போட்டா போட்டி
ஆனால், சேவாக் ஏல முறையில் இடம் பெறததால் அவரை எடுக்க முடியாமல் போனது. ஆனால் அணி சந்திரசேகர் (தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்) தலைமையிலான அனி நிர்வாகம், தோனியை ஏலத்தில் எடுக்கலாம் என்று கூறியது. அப்போது தோனியை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணியும் அதீத ஆர்வம் காட்டியது.
ஏலத்தில் தோனியை கைப்பற்ற கொல்கத்தா அணிக்கும் சிஎஸ்கேவுக்கும் போட்டா போட்டியே நிலவிய நிலையில், 6 கோடி ரூபாய்க்கு தோனியை எடுத்தது சிஎஸ்கே அணி. அப்போது முதல் சென்னை அணியின் சொத்தாகவும் அடையாளமாகவும் தோனி மாறிப்போனார். தோனிக்காகவே சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது.
12 முறை பிளே ஆப்
கொல்கத்தாவில் போய் சென்னை அணி விளையாடினாலும் அரங்கு முழுக்க தோனி.. தோனி.. என்று ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். தோனி தலைமையில் சென்னை அணி 12 முறை பிளே ஆப் சுற்றை எட்டியுள்ளது. 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. 2 சாம்பியன்ஸ் டிராபிகளும் வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியை மிகவும் வெற்றிகரமான அணியாக மாற்றிய பெருமை தோனியையே சாரும்.

