ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு சீசனுக்கும் தோனி ஆடுவாரா மாட்டாரா எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். இறுதியில் தோனி சர்ப்ரைஸ் கொடுத்து களத்தில் இறங்கிவிடுவார். ஆனால், இந்த சீசன் அப்படியில்லை. தோனி ஓய்வை அறிவித்துவிட்டார். ஒரு நிறைவேறாத ஆசையுடன் தோனி ஓய்வை அறிவிப்பதுதான் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.
இந்திய அணிக்காக 2019 உலகக்கோப்பையில் தோனி கடைசியாக ஆடியிருந்தார். 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை பெறுவதாக அறிவித்தார்.
அப்போதிருந்தே ஐ.பி.எல் போட்டிகளிலும் தோனியின் ஓய்வு குறித்து பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. 2020 இல் துபாயில் நடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடி ப்ளே ஆப்ஸூக்கு கூட செல்லாமல் தோற்றிருக்கும். அந்த சீசனின் கடைசிப் போட்டியில், ‘இதுதான் உங்களின் கடைசிப் போட்டியா?’ என டேனி மோரிசன் கேட்க, ‘Definitely Not’ என தோனி பதில் கூறியிருப்பார். 2021 சீசனை சென்னை அணி வென்றிருக்கும்.

அப்போது சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்திருக்கும். அதில் பேசிய தோனி, ‘தமிழ்நாடு எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு விளையாட்டை எப்படி அணுக வேண்டுமென சென்னை ரசிகர்கள் கற்பித்திருக்கிறார்கள். ராஞ்சிக்கு பிறகு சென்னை எனக்கு இன்னொரு வீடு போல மாறிவிட்டது. என்னுடைய கடைசிப் போட்டியை சென்னை மைதானத்தில் வைத்து ஆட விரும்புகிறேன். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தானாலும் சரி. சென்னை ரசிகர்கள் முன்பே ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன்’ எனக் கூறியிருந்தார்.
அதன்பிறகுமே தோனி 5 சீசன்கள் ஆடியிருந்தார். ஆனால், அவர் நினைத்ததை போல சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவரால் கடைசிப் போட்டியை ஆடி ஓய்வை அறிவிக்க முடியவில்லை. 2027 சீசனில் அந்த ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. 2027 க்குப் பிறகு மெகா ஏலம் என்பதால் தோனியும் இன்னும் ஒரு சீசனில் ஆடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல தோனி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.