“‘5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? முதலீட்டில் ஏன் இந்தக் குறுகிய சிந்தனை?” என்கிற கேள்விகளை எழுப்பு கடந்த வாரத்தில் விகடன்.காமில் பணம் பகுதியில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்தக் கட்டுரையைப் படித்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், ”நீண்ட கால முதலீடு என்றாலும் உத்தரவாதமான வருமானம் இது என்று எழுத்து பூர்வமாக உங்களால் சொல்ல முடியுமா?” என்று கமெண்ட் செய்திருந்தார்.
மோகன்ராஜ் என்பவர், ”மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் 12% வருமானத்துக்காக ரியல் எஸ்டேட், தங்கத்தைப் போல 10 ஆண்டுகள் காத்திருக்க முடியாது” என்று கமெண்ட்டில் சொல்லி இருந்தார்.
இந்த இரண்டு கமெண்ட்டுகளும் இந்த இருவரது கருத்து என்று மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. ”மியூச்சுவல் ஃபண்டில் வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை” என்று சொல்லி, இன்றைக்கும்கூட அதில் முதலீடு எதுவும் செய்யாமல் பலரும் ஒதுங்கி நிற்கவே செய்கிறார்கள்.
எனவே இந்த இரு கமெண்ட்டுகளுக்கு ஒரு சிறு விளக்கத்தைத் தருவது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெளிவாகப் பிழை இல்லாமல் புரிந்துகொள்ள நிச்சயம் உதவி செய்வதாக இருக்கும்!
முதலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் உத்தரவாதமானதா, இல்லையா என்று பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் நிச்சயம் உத்தரவாதமானது அல்ல. ஒரு ஆண்டில் 10% லாபம் கிடைக்கலாம்! அடுத்த ஆண்டில் நஷ்டமும் வரலாம். அடுத்த ஆண்டில் லாபம் கிடைக்கலாம்; அதற்கடுத்த ஆண்டில் நஷ்டம் வரலாம்.
இப்படி லாபமும், நஷ்டமும் தொடர்ந்து தருவதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. காரணம், பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒருவருக்கு லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ தரும்.
ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நஷ்டத்திலிருந்து மீண்டு வந்துவிடுவார். அதன்பிறகு அவரது முதலீடு லாபத்துக்கு வரத் தொடங்கியபின், 7 ஆண்டு கால அவர் தொடர்ந்து முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் அவருக்கு நஷ்டம் என்பதே வர வாய்ப்பில்லை என்பதுடன், குறைந்தபட்சம் 7% வருமானம் கிடைக்க 98% வாய்ப்பு உண்டு என்பதுதான் கடந்த காலப் பங்குச் சந்தை தரும் புள்ளிவிவரம். 7% மட்டும்தான் என்றில்லை. அதற்கு மேலும் லாபம் கிடைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
முதலீட்டில் உத்தரவாதம் என்பது என்ன? 10% உத்தரவாதமான வருமானம் எனில், 11% லாபமும் தரக்கூடாது! 9% லாபமும் தரக்கூடாது! ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எதிர்காலத்தில் பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கேற்ப நீண்ட கால நோக்கில் 10% லாபம் கிடைக்கலாம்; 12% லாபம் கிடைக்கலாம். அவ்வளவு ஏன், 15% லாபம் கூட கிடைக்கலாம்!
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்தும் ஃபண்ட் திட்டமானது கடந்த 22 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 23% லாபம் தந்திருக்கிறது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது!