Nanayam Vikatan – 10 May 2026 – இந்தியாவின் நிதிப் பழக்கவழக்கங்கள் மிக வேகமாக மாறி வருகின்றன. | increase in money deposit with loan ratio

Spread the love

இந்தியர்கள் பலரின் நிதிநிலை கவலைக்கிடமாகி வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. காரணம், வங்கிகளில் சேமிப்புகள் வெகுவாகக் குறைந்து கடன்கள் அதிகரித்துவருவதே.

2025 – 26 நிதியாண்டில் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி 9% -11% ஆக உள்ள நிலையில், கடன்களின் வளர்ச்சியோ 14% ஆக உயர்ந்துள்ளது. சேமிப்பு மற்றும் கடன் இடையே காணப்படும் 3% – 5% இடைவெளி, ஆபத்தான போக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் நிதிப் பழக்கவழக்கங்கள் மிக வேகமாக மாறி வருகின்றன. சேமிப்பு என்பது பிரதானமாக இருந்தது மாறி, இன்று பெரும்பாலான மக்கள் எல்லாவற்றுக்கும் கடன் வாங்கும் பழக்கத்துக்கு மாறியுள்ளனர். குறிப்பாக, தனிநபர் கடன்கள், கார் கடன்கள், தங்க நகைக் கடன்கள் மற்றும் பிற நுகர்வோர் கடன்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப வசதிகள் இன்று கடன் வழங்கலை மிக எளிதாக்கிவிட்டன. சில நிமிடங்களில் கடன் கிடைப்பது, வட்டி விகிதங்கள் குறைந்திருப்பது, ‘இப்போது வாங்கு, பிறகு பணம் கொடு’ போன்ற வசதிகள் மக்களைக் கடன் வாங்கிச் செலவு செய்யத் தூண்டுகின்றன.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம், அதிக அபாயமுள்ள கடன்கள் (Unsecured Loans) ஆண்டுக்கு 17%க்கும் மேல் வளர்ச்சியடைந்து வருவது. இவை எதிர்காலத்தில் வங்கிகளுக்கு வாராக்கடன் சுமையை உருவாக்குவதோடு, பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் தள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது.

இன்றைய வாழ்க்கைமுறை மக்களின் பண மேலாண்மையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. கடன் என்பது அவசரத் தேவைக்காக மட்டுமல்லாது, சகஜமான பழக்கமாக மாறிவருகிறது. இது தொடர்ந்தால் தனிநபர்களின் நிதிச் சமநிலை மட்டுமன்றி, நாட்டின் மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் எல்லா துறைகளிலும் வேலை இழப்புகளை அதிகரித்துள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கும் வருமான உயர்வு இல்லாத நிலையே உள்ளது. இச்சூழலில், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, மருத்துவ அவசரங்கள் ஆகியவை மக்களை மீள முடியாத நிதி நெருக்கடியில் தள்ளக்கூடியவை. இந்த அபாயத்தை உணர்ந்தே ரிசர்வ் வங்கியும், வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெபாசிட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கவும், கடன்களை வழங்குவதில் பொறுப்புடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு தனிநபரும் இது சவாலான காலகட்டம் என்பதை உணர்ந்து தங்களது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ள தயாராக வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்ற அத்தியாவசிய கடன்களை மட்டுமே பெற்று, நுகர்வு சார்ந்த கடன்களைக் குறைக்க வேண்டும். ‘வருமானத்தில் முதல் செலவு சேமிப்பு’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.

நம் குடும்பத்தின் எதிர்காலமும் நாட்டின் நிதிநிலையும் சிறப்பாக இருக்க, இது காலத்தின் கட்டாயம்!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *