Nanayam Vikatan – 23 August 2026 – பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள்… செபி செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது! | guidance for F&O investment for sebi

Spread the love

பங்குச் சந்தையில் புழங்கும் பலருக்கும் பல்வேறுவிதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலானோர் பங்குச் சந்தையில் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிலர் ‘அதில் நிறைய பணத்தை இழந்துவிட்டதாக’ எப்போதும் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். விசாரித்தால் அவர்கள், ‘எஃப் அண்ட் ஓ’-வில் முதலீடு செய்தவர்களாக இருப்பார்கள். நிஜமாகவே பலரும், எஃப் அண்ட் ஓ-தான் பங்குச் சந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எஃப் அண்ட் ஓ என்பது பங்குச் சந்தையின் ஒரு பகுதி. உண்மையில் அது சிறு முதலீட்டாளர்களுக்கானதே அல்ல. செபி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறு முதலீட்டாளர்களை எஃப் அண்ட் ஓ வர்த்தகத்திலிருந்து விலக்கி வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் விளைவாக, 2025-ல் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்கள் சந்தித்த மொத்த நஷ்டம் ஒப்பீட்டளவில், 2026-ல் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதேபோல், எஃப் அண்ட் ஓ-வில் ஈடுபட்ட சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் சற்றே குறைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நல்ல மாற்றம்.

என்றாலும், சிறு முதலீட்டாளருக்கான சராசரி நஷ்டம் முன்பைவிட உயர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் முதலீட்டுத் தொகை அதிகரித்திருப்பது இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது. எனவே, எஃப் அண்ட் ஓ அபாயங்கள் குறித்து இன்னும் அதிகமான விழிப்புணர்வும், இன்னும் பல கட்டுப்பாடுகளும் தேவை. ஆக, செபி செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

சிறு முதலீட்டாளர்கள் பலருக்கு எஃப் அண்ட் ஓ என்பது குறைந்த பணத்தில் பெரிய தொகைக்கு வர்த்தகம் செய்யும் வாய்ப்பாகவே தெரிகிறது. கிடைத்தால் பல மடங்கு லாபம் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், நஷ்டம் வந்தால் மொத்தப் பணமும் போய்விடும் என்ற நிதர்சனத்தை அவர்கள் உணர்வதில்லை.

இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிநிலை, பங்குச் சந்தை அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் முதலீட்டுத் திறனை செபி மதிப்பிடலாம். அதன் மூலம் அவர்கள் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்துக்கு வருவதைக் கட்டுப்படுத்தலாம்.மேலும், சந்தையில் நடக்கும் ஸ்பெகுலேஷன் நடவடிக்கைகளையும், ‘பயிற்சி’ என்ற பெயரில் அதிக வருமான ஆசை காட்டி மோசடி செய்பவர்களையும் கடுமையான கண்காணிப்புக்குள் செபி கொண்டுவர வேண்டும். அப்போதுதான், முதலீட்டாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உருவாக்க முடியும்.

‘நம் பணத்தை நாம்தான் சரியாக நிர்வகிக்க வேண்டும்’ என்ற சுயவிதியை முதலீட்டாளர்களும் பின்பற்ற வேண்டும். உடனடிப் பணம், அதிக லாபம் போன்ற பேராசைகளை விலக்கி, விவேகத்துடனும் ஒழுக்கத்துடனும் முதலீடுகளை மேற்கொள்வது அவசியம்.

பங்குச் சந்தை என்பது ஒரே நாளில் பணம் கொட்டும் இயந்திரம் அல்ல, நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்கும் கருவி. அதைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் முதலீடு செய்வோம்.

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *