‘முன்பே வா’, ‘மயிலிறகே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயர்.
தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தந்து பலரின் ஃபேவரிட்டாக இருக்கிறார்.

இவருக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயிலில் இவரின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
அவருடைய திருமணம் தொடர்பாக நரேஷ் ஐயர் சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயில் நிர்வாகம், அவர்களுடைய சமூக வலைத்தளக் கணக்கில் இத்தகவலைப் பகிர்ந்திருக்கிறது.
அந்தப் பதிவில், “தேசிய விருது பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயரின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
இப்பெருமகிழ்ச்சிக்குரிய புதிய வாழ்க்கைப் பயணம் எங்களது திருக்கோயிலில் தொடங்குவதை நாங்கள் பெரும் பேறாகக் கருதுகிறோம்.
புதிதாக திருமணப் பந்தத்தில் இணைந்துள்ள தம்பதியருக்கு இறைவனின் அருளால் வாழ்நாள் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், வளமும் பெருக வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.
இவர்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்கள்.
நரேஷ் ஐயரின் ரசிகர்கள் பலரும் அவருடைய திருமணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.