Nobel Prize: ’நாப்கின்’ முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரை! | Napkin Muruganantham nominated for Nobel Peace Prize –

Spread the love

மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்க, மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர், முருகானந்தம்.

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த இவர் கண்டுபிடித்த இயந்திரங்கள், இந்தியா மட்டுமின்றி 47 நாடுகளில் உள்ள பெண்களின் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருந்து வருகின்றன.

2014ம் ஆண்டின் ’டைம்’ இதழின் உலகின் 100 செல்வாக்கு மிக்க மனிதர் பட்டியலில் இடம் பிடித்த இவர், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டின் 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்திலும், கேரளாவின் 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திலும் இவரது வாழ்க்கை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற திரைப்படமும் வெளியானது.

முருகானந்தம்

முருகானந்தம்

இந்த நிலையில் இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 208 தனி நபர்கள் மற்றும் 79 அமைப்புகள் என மொத்தம் 287 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் முருகானந்தத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஓட்டுமொத்த நாட்டிற்கும் முருகானந்தம் பெருமை சேர்ந்துள்ளார்.

இது குறித்து முருகானந்தம் கூறியதாவது, “800 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில், இந்தாண்டில் வெறும் 208 பேரின் பெயர்கள்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய விருதாகக் கருதப்படும் இந்த விருதுக்கு, பல பிரபலங்களின் பெயர்கள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது பெயர் நடுவர் குழுவால் ஏற்கப்பட்டுள்ளதைப் பெருமையாகக் கருதுகிறேன். இதுவே விருது கிடைத்தது போன்ற உணர்வைத் தந்துள்ளது. இது நாப்கின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்தும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *