ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறது ஈரான். இதனால், டன் கணக்கான எண்ணெய் பேரல்களை ஏற்றி வந்த கப்பல்கள் வெளியே செல்ல முடியாமல், ஹார்முஸ் ஜலசந்தியின் எல்லையில் தவித்து கொண்டிருக்கின்றன.
இப்படி ஓரிடத்தில் முடங்கி, வெளியே வர முடியாமல் சிக்கியிருக்கும் எண்ணெய்களாலும்… தங்களது மீது நடந்த தாக்குதல்களால் தற்காலிகமாக மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதாலும்… கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது.
இந்த நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, வருகிற மே 1-ம் தேதி முதல், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) ஐக்கிய அரபு அமீரகம் உறுப்பினர் அல்ல.

ஏன் இந்த அறிவிப்பு?
1960-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் ஐக்கிய அரபு அமீரகம் 1967-ம் ஆண்டு சேர்ந்தது.
சவுதி அரேபியா தான் இந்த அமைப்பின் தலைமை பதவியில் இருக்கிறது.
ஒவ்வொரு உறுப்பினர் நாடும் ‘இவ்வளவு’ தான் எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற நடைமுறை OPEC-ல் உள்ளது.
இந்த நடைமுறையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உடன்பாடில்லை.
ஈரான் போருக்கு முன்பு, OPEC வரைமுறை படி, ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பீப்பா எண்ணெய்யை ஐக்கிய அரபு அமீரகம் உற்பத்தி செய்தது. இதை 2027-ம் ஆண்டின் போது, 5 மில்லியன் பேரல்களாக உயர்த்த வேண்டும் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணம்.
அதற்கான கட்டமைப்புகளையும் அது தயார் செய்துவிட்டது. ஆனால், OPEC-ல் உறுப்பினராக இருந்தால், இந்த எண்ணம் ஈடேறாது.
பிராந்திய பிரச்னை
அதிக எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான வளமும், கட்டமைப்பும் தங்களிடம் இருக்கும் போது, தாங்கள் ஏன் இன்னும் சவுதி அரேபியாவின் பேச்சைக் கேட்டு குறைவான எண்ணெயை மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் நினைக்கிறது.

மேலும், இதில் கட்டமைப்பு, உற்பத்தியைத் தாண்டி, வருமானத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். அதிக எண்ணெயை உற்பத்தி செய்து, அதிக எண்ணெயை விற்கும் போது, அபுதாபிக்கு அதிக வருமானமும் கிடைக்கும். இது அந்த நாட்டுடைய பொருளாதாரத்தை வலுபடுத்தும்.
இதுபோக, இந்த வெளியேறலில் முக்கியமான இன்னொரு விஷயமும் உண்டு. அமெரிக்கா, இஸ்ரேலை தாக்க ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கா, இஸ்ரேலின் சொத்துகளைக் குறி வைத்தது.
இதில் ஐக்கிய அரபு அமீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரானை எதிர்த்து மத்திய கிழக்கில் இருக்கும் OPEC உறுப்பு நாடுகள் வலுவான கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்பது அமீரகத்திற்கு கடும் அதிருப்தி.
இன்னொரு பக்கம், மத்திய கிழக்கு நாடுகளுக்குள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டிகள் உண்டு. இத்துடன் உள்ளுக்குள்ளேயே பிராந்திய பிரச்னைகளும் உள்ளன.
இதையும் மனதில் வைத்து தான் ஐக்கிய அரபு அமீரகம் OPEC-ல் இருந்து வெளியேறியுள்ளது.
‘இது கொள்கை ரீதியான முடிவு. தேசத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு’ என்று ஒட்டுமொத்த அரசியலையும் மறைத்து ஐக்கிய அரபு அமீரகம் இந்த வெளியேற்றத்தைப் பற்றி கூறியுள்ளது.

இதனால், எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுமா?
ஈரான் போரினால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.
தங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளது.
ஒருவேளை, அதிக எண்ணெயை அமீரகம் உற்பத்தி செய்தாலும், அதை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வெளியே கொண்டு வர வேண்டும். அதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை.
முக்கியமாக, 2027-ம் ஆண்டில் தான், ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்று டார்க்கெட் வைத்துள்ளது அமீரகம். அதனால், இப்போது உற்பத்தி அதிகரிக்காது. இதனால், எண்ணெய் விலையிலும் மாற்றம் இருக்காது.
2027-ம் ஆண்டு 5 மில்லியன் பீப்பா எண்ணெயை அமீரகம் உற்பத்தி செய்ய தொடங்கும் போது, சந்தைக்குள் அதிக எண்ணெய் வரும். இதனால், எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
விலை குறைந்தாலும், உற்பத்தியை அதிகரித்து சந்தைக்குள் அதிக எண்ணெயை கொண்டு வருவதால் அமீரகத்திற்கு லாபம் தான்.
OPEC-ற்கு பிரச்னையா?
உலகத்தில் உற்பத்தி ஆகும் 40 சதவிகித எண்ணெய் OPEC நாடுகளில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது.
இந்த அமைப்பில் இருந்து அமீரகம் வெளியேறும் போது, இது அந்த அமைப்பிற்கு நிச்சயம் பின்னடைவு தான்.
காரணம், ஒரு நாடு அமைப்பில் இருந்து வெளியேறும் போது, குறிப்பிட்ட சதவிகித எண்ணெய் உற்பத்தி அமைப்பில் இருந்து வெளியேறும்.
மேலும், உலக அளவில் இந்த அமைப்பிற்கான பலமும் சற்று குறையும்.

ட்ரம்பிற்கு வெற்றி
தனது முதல் பதவிக்காலத்திலும் சரி… இப்போதும் சரி… அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு OPEC அமைப்பு மீது கடும் அதிருப்தி.
இந்த அமைப்பு எண்ணெய் வர்த்தகத்தைக் கையில் வைத்திருக்கிறது… இது எண்ணெய் விலை குறைவதை அனுமதிக்கவில்லை என்று OPEC மீது குற்றம் சாட்டி வருகிறார் ட்ரம்ப்.
ஆக, அந்த அமைப்பில் இருந்து ஒரு முக்கிய நாடு வெளியேறுவது ட்ரம்பிற்கு ஒருவித வெற்றியே.