குஜராத் யுவ மோர்ச்சாவில் அவர் பணியாற்றிய காலத்தில், பெரிய அளவிலான ஆன்லைன் சந்திப்பு உட்பட டிஜிட்டல் மூலம் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அவரது இந்த முயற்சியால் பெரிதும் கவரப்பட்டனர்.
ஜோஷியை தேசிய இளைஞரணி தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அவர் பெரிய அளவில் எந்தவித சர்ச்சையிலும் சிக்கவில்லை. அதோடு குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பதால் அதனை தேசிய அளவில் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறது.
வடகிழக்கு, பெண்களுக்கு முக்கியத்துவம்
கட்சி நிர்வாகிகள் பட்டியலில் வடகிழக்கில் மாநிலங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்தில் இருந்து தலா ஒருவர் வீதம் மூன்று தலைவர்கள் கட்சியின் தேசிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு அனுபவம் வாய்ந்த தலைவர்களும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
வசுந்தரா ராஜே, தீரத் சிங் ராவத் மற்றும் பிப்லப் குமார் தேப் போன்ற முன்னாள் முதல்வர்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 18 எம்.பி.க்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதோடு கட்சியில் பெண்களுக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 13 தேசிய துணைத் தலைவர்களில் ஆறு பேர் பெண்கள், இதில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இருவரும் அடங்கும். இது தவிர நான்கு பெண் செயலாளர்களும் ஒரு பெண் பொதுச் செயலாளரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.