Pasumai Vikatan – 10 December 2026 – கருகும் பயிர்கள், கதறும் டெல்டா விவசாயிகள்! – பொய் சொல்லும் தேவகவுடா!

Spread the love

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் மிகுந்த வேதனையிலும் ஆதங்கத்திலும் தவிக்கிறார்கள். ஆனால், ‘தமிழகத்திற்குச் சுமுகமாக நீர் பகிரப்படுகிறது’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தர வேண்டிய காவிரிப் பங்குநீரைத் தர மறுத்ததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி கைவிடப்பட்டது. ‘சம்பா சாகுபடியாவது கைகொடுக்குமா?’ என விவசாயிகள் காத்திருக்க, மேட்டூர் அணையில் வெறும் 40 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. வட கிழக்குப் பருவமழையும் கைகொடுக்காததால், தற்போது சம்பா நெற்பயிர்களும் கருகும் நிலை. தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க இந்தப் பகுதி விவசாயிகள் அபயக்குரல் எழுப்புகிறார்கள்.

இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழு பலமுறை உத்தரவிட்டும்கூட, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய பற்றாக்குறைக் காலப் பங்குநீரைத் திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்துவருகிறது.

இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, மேக்கே தாட்டு அணை தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை மாதவாரியாக வழங்கி வருகிறது. மழைக்காலங்களில் அதிகளவிலான நீர் கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது ஈவு இரக்கமற்ற, கொஞ்சமும் நேர்மையற்ற பொய்!

கர்நாடக அரசு ஒருமுறை கூட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, மாதவாரியாகத் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட்டதே இல்லை. கடந்த காலங்களில் காவிரி டெல்டாவில் கருகிக் கிடந்த நெற்பயிர்களும், காய்ந்து கிடந்த வாய்க்கால்களும், வேதனையில் உயிரிழந்த விவசாயிகளுமே இதற்கு சாட்சி. இவையெல்லாம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.

தன் மாநில மக்களின் நலனில் அக்கறைப்படுவதில் தவறில்லை. அதேசமயம், நேர்மை அவசியமல்லவா..? எனில், இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தபோது, இவர் எந்தளவுக்கு நடுநிலையோடு நடந்திருப்பார் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *