Patriot Review: ஒட்டுக்கேட்கும் ஸ்பைவேர், கேள்விகேட்கும் மம்மூட்டி, மோகன்லால்; சேட்டன்களின் அடிபொலி!

Spread the love

ஒருவருடைய போன், லேப்டாப்பில் சட்டவிரோதமாக நுழையும் பெரிஸ்கோப் என்ற ஸ்பைவேரைக் கண்டுபிடிக்கிறது சக்தியின் (பஹத் பாசில்) சக்தி சாஃப்ட்வேர் நிறுவனம்.

இதற்கு சக்தியின் தந்தையும் மத்திய அமைச்சருமான ஜே.பி. சுந்தரம் (ராஜீவ் மேனன்) சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி கொடுக்கிறார். அதனால் அந்த ஸ்பைவேர்கள் சாமானியர்கள் மீது ஏவப்பட்டு, அவர்கள் காவு வாங்கப்படுகிறார்கள்.

இதை அறிய முயலும் மத்திய அமைச்சர் நளினியும் (ரேவதி), சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் ஜோதியும் (தர்ஷனா) சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழக்க, அந்த ஸ்பைவேரையும், அதற்குப் பின்னாலுள்ள அரசு-கார்ப்ரேட் கூட்டையும் கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார் இந்தியப் பாதுகாப்புத் துறையில் அதிகாரியாகவுள்ள டானியல் ஜேம்ஸ் (மம்மூட்டி).

Patriot Review - Mammootty - Mohanlal
Patriot Review – Mammootty – Mohanlal

அதனால், மொத்த அரசும், சட்டங்களும் டானியல் மேல் திரும்ப, அவற்றைச் சமாளித்து, ஸ்பைவேரையும், அதன் பின்னணியையும் எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார் என்பதே மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் மலையாளப் படமான ‘பேட்ரியாட்’ படத்தின் கதை.

மதிநுட்பம், ஆக்ஷன், எமோஷன் என ஒரு கமெர்சியல் பேக்கேஜ் கதாநாயகன் பாத்திரத்தை, அசால்ட்டாக தன் அனுபவத்தால் தூக்கி நிறுத்துகிறார் மம்மூட்டி. தேவையான இடங்களில் முதுமைக்கான நடுக்கம், தன் ஸ்டைலில் சின்ன சின்ன ஒன்லைன் கவுன்ட்டர் என மம்மூட்டியின் கூடுதல் சிறப்புகளும் ப்ள்ஸ்கள்!

வழக்கமான ‘ஆக்ரோஷ’ பகத் பாசிலாகத்தான் இதிலும் வருகிறார் என்றாலும், தேவையான வில்லனிஸத்தையும் கடத்தியிருக்கிறார். பக்கா ஆக்ஷன், துணைக்குக் கொஞ்சம் எமோஷன் என விசில், கைத்தட்டல்களோடு மோகன்லால் களமிறங்குகிறார்.

வஞ்சகமான அமைச்சராக ராஜீவ் மேனன், குற்றவுணர்ச்சியில் அலைபவராக குஞ்சாக்கோ போபன், துடிப்பான பெண்ணாக தர்ஷனா இந்தத் த்ரில்லருக்கு எரிபொருளை ஊற்றியிருக்கிறார்கள். சரின் ஷிஹாப், நயன்தாரா, ரேவதி ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

Patriot Review
Patriot Review

பரபர த்ரில்லரை மிதமான வேகத்தில் சுவாரஸ்யம் குறையாத திரைமொழியில் பேசியிருக்கும் மகேஷ் நாராயணனின் இயக்கத்திற்கு மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணன் – ராகுல் ராதாகிருஷ்ணன் கூட்டணியின் படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கின்றன.

காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி போன்றவற்றில் கோணங்களும், கட்-களும் ‘அட…’ போட வைக்கின்றன. த்ரில்லருக்கான இறுக்கத்தையும், எமோஷனுக்கான அழுத்தத்தையும் ஒருசேரத் தந்து, படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே பயணிக்கிறது சுஷின் ஷாமின் பின்னணி இசை. வெளிப்புற சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசியலை உலுக்கிய ஒட்டுக்கேட்கும் ஸ்பைவேர் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு, கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார் மகேஷ் நாராயணன்.

‘பெரிஸ்கோப்’ ஸ்பைவேர் பிரச்னையோடு முதல் காட்சியிலிருந்தே கதைக்குள் நுழைகிறது படம். பெரிஸ்கோப் ஸ்பைவேரின் தாக்கம், அதன் அரசியல் பின்னணி, அதனோடு தொடர்புடைய நபர்கள் என்ற வலைப்பின்னலை, மம்மூட்டியின் பார்வையில் விவரிக்கிறது திரைக்கதை.

மெதுவாக நகர்ந்தாலும், தகவல்களின் நுணுக்கத்தையும், கதாபாத்திரங்களின் ஆழத்தையும் அவற்றின் வெவ்வேறு கோணங்களையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது. ஆங்காங்கே மம்மூட்டியின் அதீத ஆக்ஷனும், எதார்த்தத்தை மீறிய மதிநுட்பமும் துருத்தலாக நின்றாலும், அவை பிரச்னையாக மாறவில்லை.

Patriot Review
Patriot Review

அரசியல் நையாண்டி, அதிகாரத்திற்கும் கார்ப்பரேட்டிற்கும் எதிரான வசனங்களோடு, எமோஷனல் வசனங்களும் முதல்பாதிக்கு உயிர்ப்பைக் கொடுக்கின்றன. குஞ்சாக்கோ போகன் – தர்ஷனாவின் பின்கதை, அதன் தேவையை மீறி ஓடுவது மைனஸ்! அதுவும் அந்தப் பாடல்… ம்ஹூம்ம்!

மம்மூட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் எனப் பெரும்பாலான இரண்டாம் பாதி நடிகர்களின் கையில் இருக்கிறது. நுணுக்கமான விவரணை, மெதுவான த்ரில்லர், திடீர் ஆக்ஷன், திடீர் பரபர, எமோஷன், கொஞ்சம் அரசியல் டச், கேமியோக்கள், சின்ன காமெடிகள் எனப் பல வண்ணங்களைக் கையாள்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை.

மோகன்லாலின் வருகையும், ஆக்ஷனும் கைத்தட்டல்களை வாங்குகின்றன. மம்மூட்டியும், மோகன்லாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் கைகோர்த்திருப்பதும், அதற்கு நியாயம் செய்யும் காட்சிகளும் ‘நச்’ ரகம்.

ஆக்ஷன் காட்சிகளின் சின்ன சின்ன விவரணைகளையும் சேர்த்து, அவற்றைத் திரைக்கதை நகர்வுக்கும் பயன்படுத்திக் கவனிக்க வைக்கிறது எழுத்து. ஆதார் கார்டு, பாகிஸ்தான் எனச் சில சமகால விவகாரங்களையும் நையாண்டி செய்கிறது எழுத்து.

Patriot Review
Patriot Review

ஆனால், லாஜிக் கேள்விகளும் எக்கச்சக்கமான வரிசைக்கட்டி நிற்கின்றன. அதோடு, இறுதிக்காட்சிக்கு முந்தைய பெரிய எமோஷன் காட்சி அதற்கான தாக்கத்தைத் தராமல், ஓர் அதிர்ச்சி மதிப்பீடாக மட்டுமே நகர்வதும், வழக்கமான ஹீரோ – வில்லன் சண்டை க்ளைமாக்ஸும் மைனஸ்! 

சாமானியர்களின் தன்னுரிமையை வேட்டையாடும் அரசையும், கார்ப்பரேட்டையும், அவற்றுக்குத் துணை போகும் அரசியல்வாதிகளையும் இறுதிக்காட்சியில் கேள்விக்குட்படுத்துகிறது படம்.

அதோடு, தேசபக்தர் யார், தேசத்துரோகி யார், இப்படி அடையாளப்படுத்துவது யார் போன்ற கேள்வியையும் முன்வைக்கும் `பேட்ரியாட்’ படம், அரசியலாக மட்டுமல்லாமல், திரையனுபவமாகவும் வெல்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *