சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணங்களைப் பதிவு செய்துள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) தன்வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.
அமெரிக்காவில் உள்ள ஆல்பிரட் எ. நாஃப் (Alfred A. Knopf) இந்தப் புத்தகத்தை வெளியிட உள்ள நிலையில், இதன் இந்திய வெளியீட்டு உரிமையைக் கொண்டிருந்த ‘பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ (Penguin Random House India) நிறுவனம் திடீரென அதிலிருந்து விலகியுள்ளது.
கையெழுத்துப் பிரதியில் சில மாற்றங்களைச் செய்யுமாறு பெங்குயின் தரப்பு கேட்டதாகவும், அதை சோனியா காந்தி ஏற்க மறுத்ததாலேயே இந்த விலகல் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இந்தக் காரணத்தினால் தான் விலகியதாகக் கூறப்படுவதை பெங்குயின் இந்தியா மறுத்துள்ளது.

‘பிலாங்கிங்’ என்ன புத்தகம்?
544 பக்கங்களைக் கொண்ட இந்தத் தன்வரலாற்று நூல், சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை முதல் பல ஆண்டுகால அரசியல் பயணம் வரை விரிவாகப் பேசுகிறது. இத்தாலியில் அவர் கழித்த குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, 1968-ல் நடைபெற்ற திருமணம் மற்றும் இந்தியாவின் முன்னணி அரசியல் குடும்பத்திற்குள் அவர் நுழைந்தது ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், சஞ்சய் காந்தியின் மறைவு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள் போன்ற குடும்பத்தை உலுக்கிய துயரச் சம்பவங்கள் குறித்த அவரது பார்வையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியலுக்குள் வந்தது, காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்த காலம், மற்றும் 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி அமைந்தபோது பிரதமர் பதவியை ஏற்க அவர் மறுத்த முடிவு போன்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது.
பெங்குயினுக்கும் சோனியா காந்திக்கும் என்ன மோதல்?
இந்தியாவில் இந்தப் புத்தகத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, வெளியீட்டுக்கு முன்பாக வழக்கமான ‘பேக்ட்-செக்கிங்’ (Fact-checking) மற்றும் ‘எடிட்டோரியல் ரிவ்யூ’ (Editorial review) பணிகளை மேற்கொண்டது. இந்தப் பணியின்போது புத்தகத்தின் சில பகுதிகளில் மாற்றங்களையோ அல்லது நீக்கங்களையோ அந்நிறுவனம் பரிந்துரைத்ததாகச் செய்திகள் வெளியாயின.