பெர்சனல் லோன் – இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் வகைகளில் ஒன்று.
அது தான் எளிதாக கிடைக்கிறதே என்று பலரும் அதிக பெர்சனல் லோன்களை வாங்கி மாட்டிக்கொள்கின்றனர்.
இதனால், பெர்சனல் லோன் மக்களுக்கு விரிக்கப்படும் வலையா என்கிற கேள்வியை நிதி ஆலோசகர் விஷ்ணு வரதனிடம் முன்வைத்தோம்.
“பெர்சனல் லோன் மட்டுமல்ல… எந்தவொரு கடனுமே வலை இல்லை.
வரமாக இருப்பதும் வலையாக மாறுவதும் அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
பெர்சனல் லோனில் பெரிய கடன் தொகை மிக எளிதாக கிடைத்துவிடுகிறது. இது மக்களுக்கு நல்ல கவர்ச்சிகரமாக தெரிகிறது.

ஆனால், அதற்கு பின் அதிக வட்டித் தொகை இருக்கிறது என்பது மக்களின் கண்ணுக்கு கடன் வாங்கும்வரை தெரிவதில்லை.
பெர்சனல் லோனை தேவையில்லாத… ஆடம்பர செலவுகளுக்கு வாங்கவே வாங்காதீர்கள். இந்த மாதிரியான செலவுகளுக்கு 99 சதவிகிதம் பணம் சேர்த்து வைத்து செலவு செய்யப் பாருங்கள்.
பல பெர்சனல் லோன்களை வாங்கித் தான் பலரும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தத் தவறை எக்காரணத்தைக் கொண்டும் செய்யவே செய்யாதீர்கள்.
முந்தைய அத்தியாயத்திலேயே தேவை இருந்தால் மட்டும் பெர்சனல் லோனுக்கு செல்வது நல்லது என்பதைப் பார்த்தோம். அதனால், எப்போதுமே கடைசி ஆப்ஷனாக தான் பெர்சனல் லோன் இருக்க வேண்டும்.
ஒரு பெர்சனல் லோன் இருந்தாலே, அது அதிகம் தான். அதனால், இரண்டாவது பெர்சனல் லோன் வாங்க ஐடியா இருந்தால், அதை அப்படியே மறந்துவிடுங்கள்.