Last Updated:
“ஒரு வருடம் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும்” – பிரதமரின் கருத்து ஏன் விவாதமாகிறது? பொருளாதார நிபுணர் விளக்கம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், “அடுத்த ஓராண்டுக்கு பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும்” என்று தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் முதலீட்டு பொருளாக மட்டுமல்லாமல், கலாச்சாரம், குடும்ப மரபு மற்றும் பெண்களின் சேமிப்பு அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமரின் இந்த வேண்டுகோள் பொருளாதார நெருக்கடியின் அறிகுறியா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியர் முத்துராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், உலகளவில் ஈரான் – அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கிடையேயான போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தங்கத்தின் மீதான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். பல நாடுகள் தங்களின் பொருளாதார பாதுகாப்பிற்காக தங்க கையிருப்பை உயர்த்தி வருவதால், சர்வதேச சந்தையில் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகில் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதால், வெளிநாட்டு செலாவணி பயன்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் தங்கம் என்பது திருமணம், விழாக்கள் மற்றும் குடும்ப சேமிப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் பொருளாதார சுமையும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், டாலரின் மதிப்பு ரூ.100-ஐ நோக்கி நகரக்கூடிய சூழல் உருவாகி வருவதாகவும், இதனால் நாட்டின் பொருளாதார நிலைமைக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களின் சேமிப்பு திறனும் குறைந்து வருவதாகவும், குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்கள் மற்றும் பெண்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
பிரதமரின் கருத்து நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு கூறப்பட்டிருந்தாலும், அதன் நோக்கத்தை அரசு தெளிவாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். தங்க இறக்குமதி நாட்டின் வெளிநாட்டு செலாவணியை பாதிக்கக்கூடும் என்பதால், தேவையற்ற தங்க கொள்முதலை தற்காலிகமாக குறைக்க வேண்டும் என்ற பொருளாதார நோக்கமே இந்த கருத்தின் அடிப்படை என அரசு மற்றும் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கம் வாங்காதீங்கனு பிரதமர் மோடி ஏன் சொன்னாரு.? – பின்னணியில் இருக்கும் பேரதிர்ச்சி உண்மை