ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு 12.5% வரி கட்டியாக வேண்டும் என்பதைப் பலரும் பெரிய குறையாகப் பார்க்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் 12% லாபத்தில் 2% வரியாகக் கட்டினால்கூட, மீதம் 10% வருமானம் கிடைக்கும். ரிஸ்க்கே இல்லாத பாதுகாப்பான திட்டம் என மக்கள் நினைக்கும் எந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபம் சுமார் 1.5% முதல் 2% வரை அதிகமாகவே இருக்கும்.
இப்படி எல்லாம் சொல்வதால், அரசு நடத்தும் இந்தத் திட்டங்களில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்ல வரவில்லை. எதிர்காலத்திற்காக நாம் சேமிக்க நினைக்கும் பணத்தில் 10% – 20% பணத்தை மட்டும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தை நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதந்தோறும் முதலீடு செய்துவந்தால், கணிசமான அளவில் செல்வத்தை சேர்க்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்வதால் அதில் பணம் போட பயமாக இருக்கிறது என்கிறவர்கள், முதலில் ஒரு சிறிய தொகை அதில் முதலீடு செய்யத் தொடங்கலாம். அந்த முதலீட்டைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டபின் இன்னும் அதிகமான பணத்தை முதலீடு செய்யத் தொடங்கலாம்.
பாதுகாப்பு கருதி நீண்ட காலத்தில் குறைந்த வருமானம் தரும் திட்டங்களை மட்டுமே நம்பி இருப்பது தவறு. சிறிது ரிஸ்க் இருந்தாலும் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்வதே சரி என்பதை மக்கள் இனியாவது உணர்ந்து, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்!