இதைப் பார்த்த சீடர்களுக்குப் பயங்கர கோபம். “குருவே, அவன் உங்களை அவ்வளவு கேவலமாகப் பேசினானே, நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? அவனுக்குப் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?” என்று கேட்டனர்.
அதற்கு புத்தர் சிரித்துக் கொண்டே கேட்டார், “ஒருவர் உனக்கு ஒரு பொருளைப் பரிசாகத் தருகிறார். நீ அதை வாங்க மறுத்துவிட்டால், அந்தப் பரிசு யாரிடம் இருக்கும்?”
சீடர்கள் உடனே, “பரிசு கொடுத்தவரிடமேதான் இருக்கும்” என்றார்கள்.
புத்தர் சொன்னார், “அதேதான் இப்போதும் நடந்தது. அவன் தன் கோபத்தையும், அவமானச் சொற்களையும் எனக்குப் பரிசாக அளித்தான். ஆனால், நான் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அதனால் அந்தத் தாழ்வான வார்த்தைகள் அவனிடமே தங்கிவிட்டன”

எலினோர் ரூஸ்வெல்ட் சொன்னதும் இதைத்தான்! யாராவது நம்மைப் பார்த்து “உனக்கு அறிவில்லை, உனக்கு அழகு இல்லை, உன்னால் இந்தச் செயலைச் செய்ய முடியாது” என்று சொன்னால், அது அவர்கள் நமக்குக் கொடுக்கும் குப்பை.
அதை நாம் வாங்கிக் கொண்டால், அதாவது “ஆம், அவர்கள் சொல்வது சரிதான் போல, நமக்குத் திறமையில்லை’ என்று நம் மனதிற்குள் எண்ணத் தொடங்கினால் மட்டுமே தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவோம். நம்மை விமர்சிக்கும் உரிமையை மற்றவர்களிடம் நாம் கொடுக்காத வரை, அவர்களின் வார்த்தைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை.
நம் திறமை மற்றவர்களின் விமர்சனத்தில் இல்லை. நம் மதிப்பு மற்றவர்கள் கொடுக்கும் சான்றிதழில் இல்லை. அது நம் மனதிற்குள், நம் சுய நம்பிக்கையில் இருக்கிறது.
ஆகவே, நண்பர்களே! இனி யாராவது நம்மை மட்டம் தட்டிப் பேசினாலோ, நம்பிக்கையைக் குலைக்கும்படி நடந்துகொண்டாலோ நாம் சோர்வடையக் கூடாது.