இந்தியத் திரையுலகின் வரலாற்றிலேயே மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் `ராமாயணம்’. `தங்கல்’ படப் புகழ் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தயாராகிவருகிறது.
இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கும் வகையில், படத்தின் முதல் பாடலான `ஜெய் ஜெய் ராம்’ (Jai Jai Ram) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரபல இந்திக் கவிஞர் டாக்டர் குமார் விஸ்வாஸ் வரிகளை எழுத அர்ஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்கள். ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் திருமணம், அயோத்தி மக்கள் மலர் தூவி அவர்களை ஊர்வலமாக வரவேற்பது, ராமரின் வில்வித்தை வீரம் சார்ந்த காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
திருமணக் காட்சிகளுடன் சேர்த்து, ஆலயத்தின் உள்ளே சீதையும் ராமரும் ஒருவரையொருவர் முதன்முதலில் சந்தித்துக் கொள்ளும் நெகிழ்ச்சியான பார்வைக் காட்சியும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
1987-ம் ஆண்டின் ராமாயணத் தொடரில் ராமனாக நடித்துப் புகழ்பெற்ற அருண் கோவில் இப்படத்தில் தசரத மன்னராக நடிக்க, தந்தைக்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பு மற்றும் பரதன்-ராமர் சந்திப்பு போன்ற நெகிழ்ச்சியான தருணங்களும் இப்பாடலில் ஆழமாகப் பின்னப்பட்டுள்ளன. ராவணனாக கே.ஜி.எஃப் புகழ் யஷ், அனுமாராக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது.
பாடலின் வரிகள் ராமரின் பெருமையையும், சீதா-ராமரின் புனிதமான பந்தத்தையும் ஆழமாக எடுத்துரைக்கின்றன. முழு பாடல் வரிகளையும் இணையத்தில் தேடி கேட்டு ரசிக்கலாம்.
இந்த பக்திப் பாடல் அதிக சத்தத்துடன் கூடிய முழக்கங்களாக இல்லாமல், மனதை அமைதிப்படுத்தும் மெல்லிய இசையாக ரஹ்மான் வடிவமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ஹாலிவுட்டின் முன்னணி இசை அமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) பணியாற்றி வருகிறார். இந்திய ஆன்மீக இசைக்கு மேற்கத்திய சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா கலவையை இவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

‘டூன்’ (Dune), ‘ஒப்பன்ஹீமர்’ (Oppenheimer) போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களுக்கு VFX அமைத்து பல ஆஸ்கர் விருதுகளை வென்ற DNEG நிறுவனம், இதன் காட்சிகளை நிஜம்போல் உருவாக்க பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. “இது AI-யால் சாதாரணமாக உருவாக்கப்பட்ட படம் அல்ல, ஆயிரக்கணக்கான கலைஞர்களின் இரவுபகல் உழைப்பு” என இயக்குநர் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
உலகளவில் 50,000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், இந்தியாவில் 10,000-க்கும் மேற்பட்ட திரைகளிலும் பிரமாண்ட IMAX வடிவங்களில் இப்படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற Avatar திரைப்படங்களின் பாணியைப் பின்பற்றி, 200-க்கும் மேற்பட்ட சர்வதேசக் கலைஞர்கள் பல ஆண்டுகள் முன்கூட்டியே இதன் மெய்நிகர் உலகை (Virtual World) செதுக்கியுள்ளனர். Dune: Part Two கலை வடிவமைப்பாளர் ரவி பன்சால் மற்றும் Captain America புகழ் ராம்சே ஏவரி இணைந்து அயோத்தி அரண்மனை, மிதிலை நகரம் மற்றும் தண்டகாரண்ய காடுகளுக்கான பிரம்மாண்ட செட்களை வடிவமைக்க, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் ஆடைகளுக்காகப் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் குறிப்புகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. Avengers மற்றும் Planet of the Apes படங்களில் மோஷன்-கேப்சர் பணிகளை வழிநடத்திய டெர்ரி நோட்டரி மற்றும் Mad Max: Fury Road சண்டைப் பயிற்சியாளர் கை நோரிஸ் ஆகியோர் இப்படத்தின் போர்க் காட்சிகளையும் ஆக்ஷன் காட்சிகளையும் இயக்கியுள்ளனர். நவீன IMAX கேமராக்கள் மூலம் நேரடியாகப் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில், ஸ்ரீ ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர் பரசுராமர் கதாபாத்திரத்திலும் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். மேலும், வானத்தின் நிறம் உட்படப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் AI தொழில்நுட்பத்தின் உதவி இன்றி, சர்வதேசத் தரத்திலான நேரடி கணினி வரைகலை (CGI) மற்றும் விஎஃப்எக்ஸ் கலைஞர்களின் பல ஆண்டு மனித உழைப்பால் மிக நேர்த்தியாக மெருகேற்றப்பட்டு ஒரு மாபெரும் திரைக் காவியமாக வடிவம் பெற்றுள்ளது.
இந்தப் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளதுபோல, பாடலின் வழியே படத்தின் பிரமாண்டமும் காட்சி அமைப்புகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.