ரஜினியின் மறக்க முடியாத நடிப்பு..பாலசந்தரின் துணிச்சலான படைப்பு! – Kumudam

Spread the love

கொஞ்சம் பேச்சு..கொஞ்சம் சினிமா- வி.ராம்ஜி

’அபூர்வ ராகங்கள்’ தொடங்கி இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் எனும் உச்ச இடத்தில் நின்று, கம்பீரம் காட்டிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகி, ஒருரவுண்டு வந்துவிட்டாலும், எவரும் நிரப்பமுடியாத அளவுக்கு ஒரேயொரு காட்சியில் ஒருநூறு எக்ஸ்பிரஷன்களைக் கொடுக்கிற மறக்கமுடியாத நடிகையாகத் திகழ்கிறார் சரிதா. பேசாத படங்கள் காலத்தில் இருந்து, இன்றைக்கு ஏ ஐ தொழில்நுட்ப காலம் வரையிலும் கூட, கதாபாத்திர உருவாக்கத்திலும் காட்சியை வடிவமைக்கிற பாணியிலும் வசனம் பேசுகிற உத்திகளிலும் ‘டைரக்‌ஷன் டச்’ என்று, தன்னைப் பற்றி எல்லோரும் சொல்லுவதற்கான வார்த்தையையும் வழங்கியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். 

இவர்களின் கூட்டணியில் மிகச்சரியாகவும் மிகமிகக் கூர்மையாகவும் வந்த ‘தப்புத்தாளங்கள்’ படத்தைப் பற்றிச் சொன்னால்,’இது சரியான தாளம்தானே…’ என்று சொல்லுவீர்கள். கருப்புவெள்ளையில் வந்து, சமூகத்தின் மன வண்ணங்களை தோலுரித்த இந்தப் படத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா?

’இதை ஒரு கதையா பண்ணினா, நல்லாருக்காதே’ என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ‘இந்தக் கதையைப் படமா எடுத்தா, பாக்கமாட்டாங்களே’ என்று ஒதுங்கிக்கொள்வார்கள். ‘இவங்களோட உலகத்தையும் வாழ்க்கையையும் காட்டினா எடுபடுமா?’ என்று யோசித்து, படம் எடுப்பது குறித்து யோசிக்காமலேயே, ‘நெக்ஸ்ட்…’ என்று அடுத்த கதையை யோசிக்க, மோட்டுவளையைப் பார்ப்பார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்களின் உணர்வுகளை, அவர்களின் மனங்களை, வலிகளை, வேதனைகளை, அவமானங்களை, ஆசைகளை, கனவுகளை தைரியமாகவும் உண்மையாகவும் உலவவிட்டார் இயக்குநர் கே.பாலசந்தர்.

வார்த்தைக்குத் தக்க தாளமும் தாளத்துக்கு இணையான வார்த்தைகளும் கொண்டு ராககீதம் இசைக்கும்போது, அதுவொரு தனி சுகம். பேரானந்தம். ஆனால், தப்புத்தப்பான தாளங்கள் கொண்டது வெறும் இசையாக இல்லாமல், வாழ்க்கையாகவே ஆகிவிட்டிருந்தால்..? அங்கே என்னென்ன சோகங்கள், துயரங்கள், வேதனைகள், வலிகள். அப்படியான சகலத்தையும் ஒன்றிணைத்து நம்மை உலுக்கியெடுத்ததுதான் ’தப்புத்தாளங்கள்’. சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வாழ்வியலை, இருட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையைச் வெளிச்சம் போட்டுச் சொன்னதுதான் ‘தப்புத்தாளங்கள்’.

எனக்கு பத்துவயதிருக்கும் போது, என் அம்மாஅப்பாவிடம் கெஞ்சி சண்டைப்போட்டு, தீபாவளி ரீலீஸ் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தேன். திருச்சி வெலிங்டன் தியேட்டரில் ‘தப்புத்தாளங்கள்’ ரிலீஸ். திருச்சி பேலஸ் திரையரங்கில், ‘சிகப்பு ரோஜாக்கள்’ வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் என்னை அழைத்துச் சென்றவர்கள், தியேட்டரில் என்னைத் திட்டித்தீர்த்துவிட்டார்கள்.

முன் வரிசைக்காரர்களும் பின் வரிசைக்காரர்களும் ‘ஏங்க, உங்க பையனுக்குக் காட்றதுக்கு வேற படமே இல்லியா..?’ என தலையில் அடித்துக்கொண்டார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் தவமிருந்ததற்குக் காரணம்… இதில் ரஜினி; அதில் கமல்! கட்சிப் பாகுபாடு இல்லாமல், ரஜினி ஸ்டைலில் மயங்கினேன். கமல் அழகில் கிறங்கினேன். ஆனால், அடுத்த பத்துவருடத்தில், ‘தப்புத்தாளங்கள்’ ரஜினி படமில்லை என்றும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ கமல் படம் மட்டும்தானா என்றும் கேள்வி எழுந்தது. இது பாலசந்தர் படம்; அது பாரதிராஜா படம் என்பது தெரிந்துகொண்டேன்.

இயக்குநர் சிகரத்தில் சிகரங்களில் இதுவும் ஒன்று. அவரின் சரியான ராகங்களாகவும் தப்பே இல்லாத தாளங்களாகவும் அமைந்த படங்களில் ‘தப்புத்தாளங்கள்’ படமும்  ஒன்று.  எடுத்துக்கொள்ள அஞ்சுகிற கதைக்களம். சொல்லப்பட்ட விதத்தில் பொளேர் ரகம். இந்தநாள் வரைக்கும், இப்படியொரு கதையைத் துணிச்சலாகத் தொட எவருமே வரவில்லை. காரணம்… எவருமே இல்லை!

விபச்சார புரோக்கரில் இருந்து தொடங்குகிறது கதை. அவன் ’கிராக்கி’ பிடித்து கொண்டுபோய் விடும் இடம் சரிதாவின் வீடு. அவள்தான் சரசு. அதேஊரில் சோமன் என்பவன். பெண்கள் என்பவர்கள் வெறும் போகத்துக்கு என வாழ்பவன். அலுக்கும் வரை வீட்டில் வைத்து உல்லாசமாக இருப்பான். சலித்துவிட்டால், அவளுக்கு பணமெல்லாம் கொடுத்து, அனுப்பிவிடுவான். அப்படி அனுப்புவதாக இருந்தால், அங்கே இன்னொருத்தி வந்திருக்கிறாள் என்று அர்த்தம்.

அடுத்து தேவு. அவனை அடிக்கணும், இவனை உதைக்கணும். அந்தக் கூட்டத்தைக் கலைக்கணும். சோடாபாட்டில் வீசணும் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட் வைத்திருப்பவன் தேவு. முறுக்கு மீசையும் சைக்கிள் செயினுமாக வலம் வரும் தேவு… ரஜினி. ஆக காசுக்காக புரோக்கர் தொழில், பணத்துக்காக உடலை விற்கும் தொழில், பணமிருந்தால் பெண் வருவாள் என்கிற திமிர்க்குணம், பணத்துக்காக அடிதடியைத் தொழிலாகச் செய்யும் நாயகன்! அந்த புரோக்கர், அந்த விபச்சார சரசு, போகத்துக்கு பெண்களைப் பயன்படுத்தும் சோமன், அடித்து உதைத்து காசு பார்க்கும் தேவு… இவர்களே தப்புத்தாளங்கள்.

தேவு, சோமன் ஒருவகையில் சகோதரர்கள்தான். பல ஆண்களுக்குப் பிறந்தவன் தேவு. அவனின் அம்மா திருந்தி ஒருவனுடன் வாழ, அடுத்ததாகப் பிறக்கிறான் சோமன். அதனால் இருவரும் கிழக்கு மேற்கு. எலி பூனை. கீரி பாம்பு. தேவுவை ஒருவிதமாகவும் சோமனை ஒருவிதமாகவும் வீடு நடத்தியதால்தான் இப்படியாக மாறினான் தேவு.அப்படி மாற்றியதில் இந்தச் சமூகத்துக்கும் சம்பந்தம் உண்டு.

ஒருநாள்… போலீஸ் துரத்த தேவு ஓடிவந்து ஒளியும் இடம் சரசுவின் வீடு. அப்படித்தான் அறிமுகமாகிறார்கள். வந்த வீடு எதுவென்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால், அவன் யார் என்பது அவளுக்குப் புரிகிறது. அங்கே சின்னதான நட்பொன்று முளைவிடுகிறது. அது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து, ஒருகட்டத்தில், ‘இந்தத் தொழிலே வேணாமே’ என்கிற முடிவுக்கு இருவருமே வருகிறார்கள். அங்கே காதல் சரியான தாளகதியில் உதிக்கிறது. ‘தப்புத்தாளங்கள்’ சரி செய்ய இதுவே சரி என உணருகிறார்கள்; தெளிகிறார்கள்!

விபச்சாரத்தை விடச் சொல்கிறான் தேவு. அடிதடியை விடு என்கிறாள் சரசு. இருவரும் தவறு செய்வதில் இருந்து விலகுகிறார்கள். சேர்ந்து நல்வாழ்க்கைக்கான பாதையைத் தேடுகிறார்கள். ஆனால் நல்லவர்களை இந்தச் சமூகம் வாழவிடுவதில்லை. குறிப்பாக, தவறான பாதையில் இருந்து திருந்தியவர்களை வாழவே விடுவதில்லை. இந்தச் சமூகத்தின் தப்புத்தாளங்கள் இவை. இதைத்தான், இந்தச் சமூகத்தைத்தான் பொளேர் என்று அறைந்து, சுளீர் எனக் கிள்ளி, பளீரென குத்தி, அறைகூவல் விடுத்திருப்பார் பாலசந்தர்.

முதல் சந்திப்பிலும் அடுத்த சந்திப்பிலும் அடிக்கடி இருமிக்கொண்டே இருப்பார் சரிதா. ஏன் இருமிக்கிட்டே இருக்கே என்று கேட்பார் ரஜினி. ’இங்கே வர்றவங்க காசை மட்டும் கொடுத்துட்டுப் போறதில்லை. வியாதியையும்தான்’ என்று சொல்லிமுடிக்கும் முன்பே, இருமுவாள். மிச்சத்தை இருமிக்கொண்டே சொல்லமுடியாமல் தவிப்பார். பிறகு தியேட்டரில் படம் பார்க்கப் போயிருக்கும் ரஜினி, திரையில்… இருமல் மருந்து விளம்பரம் பார்க்க, சட்டென்று சரிதாவின் நினைவு வரும். உடனே மருந்துடன் சரிதா வீட்டுக்கு வருவார். நெகிழ்ந்துவிடுவார் சரிதா!

சரிதாவின் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி. ’நன்றி மீண்டும் வருக’ என்று எழுதப்பட்டிருக்கும். என்ன இது என்பார். சொல்லுவார். பிறகு திருந்தியதும் அதை அழித்துவிடுவார். இருவரும் புரிந்துகொண்டு உடலால் இணையும் தருணம், நம்மை உலுக்கியெடுத்துவிடும்; குலுங்கிக்குலுங்கி அழவைத்துவிடும்! சட்டென்று எழுந்த சரிதா உள்ளேபோவார். டம்ளர் தண்ணீரை எடுப்பார்.

மாத்திரையை எடுப்பார். அது கரு உண்டாகாமல் இருப்பதற்கான மாத்திரை. ஒவ்வொரு இரவுகளிலும் அவள் விழுங்குகிற மாத்திரை. பழக்கதோஷத்தில் மாத்திரையைச் சாப்பிடப் போனவள், சட்டென்று உணர்ந்து, மாத்திரையைச் சாப்பிடாமல் தேவுடன் கூடுவாள் சரசு.காதலையும் காமத்தையும் இப்படி கம்பீரமும் கலையுமாகக் காட்டமுடியுமா? தெரியவில்லை. சரசுவின் வீடு முழுக்க, திரும்பிய இடமெல்லாம் விதம்விதமான குழந்தைப் படங்கள். ஒரு சராசரி வாழ்வுக்கு ஏங்குகிற உள்மனசின் வலியை, வசனமே இல்லாமல் நமக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார் இயக்குநர் சிகரம்!

ஒருநாள், வீட்டுக்குள் கதவே இல்லாத பாத்ரூமில் குளித்துக்கொண்டிருப்பார் சரசு. ‘அடுப்புல பால் வைச்சிருக்கேன். பொங்கியிருக்கும். இறக்கிவைச்சிரு’ என்று தேவுவை அழைப்பார். தேவு பாலை இறக்கிவைத்துவிட்டு திரும்புவார். அங்கே வெற்றுடம்புடன் குளித்துக்கொண்டிருப்பார் சரசு. வெட்கத்தில் திரும்பிக்கொள்ளும் தேவு, ‘சரசு, முதல்ல நீ வெட்கப்படக் கத்துக்கணும்’ என்பார். படம் பார்ப்பவர்களை ஒருநிமிடம் என்னவோ செய்யும் இந்தத் துக்கிளியூண்டு வசனம்!

’பணம் மட்டும் இருந்துருச்சுன்னா, தப்பே பண்ணாம வாழலாம். பணக்காரப் பொம்பளைங்க மாதிரி…’ என்பார் சரசு. விழுந்துவிழுந்து சிரிப்பார் தேவு. ‘ஒருத்தன் காசு கொடுத்து அடிக்கச் சொன்னான். வீடு புகுந்து அடிக்கப் போனேன். அங்கே செம அடி அவனுக்கு. ஆனா ஒருகட்டத்துல என்னை மடக்கிப் போட்டு கட்டிப்போட்டுட்டான். போலீசுக்கு போன் பண்றேன்னான். உடனே அந்தப் பொம்பள, அவனை தனியாக் கூப்பிட்டு, ‘யாருக்கும் தெரியாம வந்தது அவன் மட்டுமில்ல, நீயும்தான். போலீஸு அதுன்னு போனா, ஊருக்கே தெரிஞ்சிரும்’னு சொன்னா’ என்று சரசுவிடம் சொல்ல, இருவருமே சிரிப்பார்கள். அதேபோல, சரசு தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்லுவாள். ‘ஒருத்தன் வந்தான். எல்லாம் முடிஞ்சு வெளியேபோகும் போது இன்னொருத்தன் வந்தான்.

ரெண்டுபேரும் பாத்துக்கிட்டாங்க. பயங்கர சண்டை. ஏன் தெரியுமா. அந்த ரெண்டுபேரும் அப்பாவும் பையனும்! இதுல என்ன கூத்து தெரியுமா. இங்கே வந்ததுக்காக சண்டை இல்ல. அப்பாவை விட பையன் அஞ்சு ரூபா கூடுதலாக் கொடுத்துட்டதுக்காக சண்டை’… இப்படி படம் நெடுக, சமூகத்தின் மீது சாட்டையைச் சுழற்றி விளாசித்தள்ளுவார் பாலசந்தர்.

அந்த புரோக்கரின் மனைவிக்கு உடல்நலமில்லை. துவண்டு சுருண்டு படுத்திருப்பாள். கணவர் வெளியே போய்விட்டு வருவார். ஏன் லேட்டு என்று கேட்பார். ’அந்த ராயப்பேட்டை கோமளாவுக்கு உடம்பு முடியல. அதான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்’ என்பார். ‘எனக்கு உடம்பு முடியல. கூட்டிட்டுப் போகலாம்ல’ என்பார். ‘நீயும் அவளும் ஒண்ணா. அவதான் தொழிலு. எனக்கு மூலதனம். இது குடும்பம்’ என்பார். கல்லூரியில் படிக்கும் மகளிடம் கறாராக நடப்பார். ஆனால், அந்தப் பெண், வேறொரு புரோக்கர் மூலமாக, இந்தத் தொழிலுக்கு வந்திருப்பார். மகளைப் பார்த்து நொறுங்கிப் போவார் புரோக்கர் அப்பா. மானம், கெளரவம் பெரிதென உணரும் தருணம் என அந்த புரோக்கர்… அப்பாவாக உணருவார்!

’தொழில்’ செய்யும்போது கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசு போடுவார் சரிதா. மகாலக்ஷ்மி என்று வாயாரப் புகழ்வார்கள். திருந்திய பிறகு காசில்லை. காசு போடாதவளைப் பார்த்து மூதேவி என்பார்கள். ’தொழில்’ செய்யும்போது, மகாலக்ஷ்மி;  திருந்தி வாழும் போது மூதேவி!

விலைமகளின் வீட்டு வாசலில் அடிக்கப்படும் சைக்கிள் பெல், வாசலில் ‘ஜாக்கிரதை, நாய் கடிக்காது’ எனும் வாசகம், ரஜினி போடும் மூக்குப்பொடி, கிழிந்த உள்பாவாடையைக் கண்டு கலங்கிய ரஜினி, ஓடிச்சென்று புதுப்பாவாடை வாங்கி வரும் அன்பு, நடுவீட்டில் புல்லட்டை ஓட்டிக்கொண்டே பேசுகிற சோமன், ‘ஏய் இவளே’ என எல்லாப் பெண்களையும் கூப்பிடுகிற ஆணாதிக்க வெறி… என்று கே.பி.டச்கள்ளும் ஆணாதிக்கத்தின் மீது பாலசந்தர் கொண்டிருந்த கோபமும் தெறித்துக்கொண்டே இருக்கும்!

ரஜினியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம். சரிதாவுக்கு முதல் படம். இந்தக் கேரக்டரில் நடிக்க, அதுவும் முதல் படத்திலேயே நடிக்க மாபெரும் துணிச்சல் வேண்டும். ‘அரங்கேற்றம்’ லலிதா, ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதை, ‘அவர்கள்’ அனு, ‘மூன்று முடிச்சு’ செல்வி முதலான கேரக்டர்கள் போல், சரசுவும் நம் மனச்சிம்மாசனத்தில் சப்பளங்கால் போட்டு உட்கார்ந்துகொண்டார்.

பார்த்தவர்கள் நல்ல படம் என்று சொன்னார்கள். ஆனால் படம் பார்க்க பெரும்பான்மையானவர்கள் வரவில்லை என்பதுதான் சோகம். கண்ணதாசனின் வரிகள், கதைக்கு ஜீவன். ’தப்புத்தாளங்கள், வழி தவறிய பாதங்கள்’, ’என்னடா பொல்லாத வாழ்க்கை’, ‘அழகான இளமங்கை’ என்று பாடல்களெல்லாம் ஹிட். விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.

1978ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30ம் தேதி தீபாவளித் திருநாளில் பாலசந்தர் போட்ட  அணுகுண்டுதான் ’தப்புத்தாளங்கள்.’ 48 வருடங்களானாலும் இப்படியொரு படம் இனியும் வருமா என்பதும் எடுப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்பதும் இன்னும் நூறாண்டுகளானலும் கேள்வியாகவே இருக்கும்! அதுதான் பாலசந்தரின் சிகர வெற்றி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *