
உலகத்துல எவனும் அப்படியொரு கல்யாண ஊர்வலத்தைப் பார்த்திருக்கமாட்டான். பட்டுச்சேலை, பட்டு வேட்டி, பழங்கள் நிறைந்த தாம்பாளங்களை ஏந்தியபடி பெண்கள் கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவில் ஊர்ந்து செல்கிறது ஒரு கார். அந்த காரை சுற்றி கையில் மெகா சைஸ் வீச்சரிவாள்களுடன் 200 ரவுடிகள், துப்பாக்கிகளுடன் ஐந்து ரவுடிகள் பாதுகாப்பு அரணாக நகர்கின்றனர்.
வீதியின் இரண்டு பக்கமும் பீதி படிந்த முகத்துடன் நிற்கும் மக்களை நோக்கி “கைய கட்டினு வேடிக்க மட்டும் பாரு. எவனாச்சும் கேமராவ தூக்கி போட்டோ, வீடியோ எடுத்த அப்புறம் உன் பாடை செலவு எங்களோடதுதான்’ என்று மிரட்டுகின்றனர். இவ்வளவு வெறித்தனமான பாதுகாப்புடன் காருக்குள் இருக்கும் புள்ளியை குறி வைக்கிறது போலீஸ் படை ஆனால், நெருங்க முடியவில்லை. பந்தியில் மணக்க மணக்க பிரியாணி பரிமாறப்பட நொடியில் டக்கென எஸ்கேப்பாகிவிட்டான்.
சினிமாவுக்கே சவால்விடும் இந்த பரபரப்புக் காட்சியை யதார்த்தத்தில் நிகழ்த்திக் காட்டிய அந்த தாதாதான் மணல்மேடு சங்கர். தற்போதைய மயிலாடுதுறை மாவட்டமான பழைய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், ஆயுதங்களைக் கையில் எடுத்த கதையும், அவனது ரத்த சரித்திரமும் உறைய வைக்கின்றன.
மாயவரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஒருவர் சங்கரின் குற்றச்சரித்திரத்தை விளக்கினார்… “சொந்தப் பழிவாங்கலுக்காக வீச்சரிவாளை எடுத்தான் சங்கர். அப்புறம் பல காரணங்களுக்காக அதை வீசி வீசி ரத்த வெள்ளத்துல குளிச்சுக் கூத்தாடிட்டான். மணல்மேடு பக்கம் களத்தூர்தான் சங்கரோட ஊர் முதல்ல அஞ்சப்பன்ங்கிற ஒரு ரௌடிக்கு எடுபிடியா இருந்தான். ஒரு பொம்பள விவகாரத்துல அவங்க ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு. பிரச்னைக்கு பயந்து தலைமறைவாயிட்டான் சங்கர். அவனை எங்கேன்னு கேட்டு, அவனோட பெத்தவங்களை கூப்பிட்டு விசாரிச்ச அஞ்சப்பன், எல்லை மீறி நடந்துட்டாப்ல. ரெண்டு பேரையும் கட்டி வெச்சு அடிச்சு அவமானம் பண்ணுன விவகாரம் சங்கரோட காதுக்குப் போக, வெறியா களமிறங்கிட்டான்.
தனக்குன்னு கூட்டாளி டீம் ஒன்றை சேர்த்துக்கிட்டு, அஞ்சப்பன் ரெகுலரா வந்து போற இடங்களை மறைஞ்சு ஃபாலோ பண்ணி ஒரு நாள் அவனை துடிக்கத் துடிக்கப் போட்டுத் தள்ளிட்டாங்க ஆத்திரத்துல அஞ்சப்பன் ஆளுங்சு மணல்மேடு கடைத்தெருவையே எரிக்க, நடுங்கிடுச்சு பழைய நாகை. குறிப்பா, பெரிய தாதாவான ஆத்தூர் வீரமணி கடும் டென்ஷனாகிட்டான்.
அஞ்சப்பன் கொலை வழக்குல ஜெயிலுக்குள்ள போன சங்கரை இழுத்துப் போட்டு அடிச்சு நொறுக்கிய வீரமணியோட அடியாளுங்க, ‘இதோட அடங்கிடு. மறுபடியும் ‘பொருளை’ கையில எடுத்தேன்னா பொளந்துடுவோம்னு எச்சரிச்சாங்க ஏற்கெனவே ரத்தம் பார்த்துட்ட சங்கரை இது இன்னும் தூண்டிவிட, வெளியில வந்ததும் அடுத்த சம்பவத்துக்கு ரெடியானான். ஜெயிலுக்குள்ள அறிமுகமான குற நடராசன், குற சிவான்னு குரூர நட்புகளோடு அவன் கைகோர்க்க டெல்டாவுல புது டெரர் டீம் ஃபார்ம் ஆச்சு. அந்த டீமின் தலைவனாகவும், தன் பெயரை மணல்மேடு சங்கர்’ன்னும் எஸ்டாபிளிஷ் பண்ணினான் சங்கர்.
இப்பேர்ப்பட்ட சங்கரின் டீமை பட்டியலின கட்சிகளின் சில தலைவர்கள், பட்டியலின அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது மிரட்டல் அரசியலுக்கு பயன்படுத்திக்கத் தொடங்கினாங்க. சொந்தப் பகைகளையும் ‘சாதிக்காகன்னு ஒரு பாதுகாப்பு போர்வையை போத்திக்கொண்டு போட்டுத் தள்ளத் தொடங்கினான் சங்கர். இதுல மிக முக்கியமானது காத்தலிங்கம்ங்கிற கேரக்டரை வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில ஓடும் பஸ்ஸுக்குள்ளேயே வெச்சுக் கொலை பண்ணுன சம்பவம். சங்கர் இறங்கி செஞ்ச மிகக் கொடூரமான இரண்டாவது கொலை இது. சம்பவப்பட்டுக் கிடந்த சடலத்தைப் பார்த்து எங்கள் போலீஸுக்கே குமட்டிடுச்சு.
முதல்ல டெல்டாவுல மட்டுமே அருவா விசினு இருந்தவன் ராம்நாடு, மதுரை, தூத்துக்குடி, திருநவேலின்னு ரவுடி குரூப்ஸ் தலைவர்களோடு ஐக்கியப்பட ஆரம்பிச்சான். இந்த குரூப்புக்கு அந்த குரூப் அடியாட்களை அனுப்புறது. ஆயுதங்களை ஷேர் பண்ணிக்கிறதுன்னு பல மாவட்ட போலீஸின் கோபத்துக்கு ஆளானான்.
சங்கர் பண்ணுன குரூர கொலைகளில் மிக பயங்கரமானது மற்றும் பரிதாபமானது கூறைநாடு சீனிவாசன் எனும் சாதாரண நபரை போட்டுத் தள்ளியதுதான். ஒரு குடும்பத்தின் அண்ணன், தங்கைக்குள் நடந்த பணம் மற்றும் சொத்து தகராறில் அண்ணன் தரப்புக்காக சங்கர் டீம் பண்ணின பாதகம் அது. சீனிவாசனை சுமோவில் கடத்திட்டுப் போய் அடித்து உட்கார வைத்து, அவர் கண் முன்னேயே புதை குழியைத் தோண்டி, பிறகு கடப்பாரையை உடலில் இறக்கி அப்படியே உயிரோடு கொள்ளிடம் ஆற்றின் கரையில் புதைச்சுட்டாங்க. மாசக்கணக்குல வெளியில் தெரியாமல் கிடந்த கொலை இது. ஆனால் ‘என் வாழ்க்கையில் நான் கொன்ன ஒரே அப்பாவி கூறைநாடு சீனிவாசன்தான். அதுக்காக என் இதயம் அழுததுன்னு டயலாக் பேசிய சங்கர், அந்தக் கொலையை, தான் நேரடியா பண்ணல, ஆளை வெச்சு பண்ணியதாகவும் நியாயம் பேசினான். எப்ப கையில் கிடைச்சாலும் சங்கரை நசுக்கி, ஒடுக்கும் வெறியில்தான் போலீஸ் உயரதிகாரிகள் இருந்தாங்க.
அதே நேரத்துல நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த போலீஸில் சிலரோ மணல்மேடு சங்கரை காப்பாத்துறதுலேயும், சில முக்கிய விஷயங்கள் குறித்து அவனுக்கு துப்பு கொடுக்குறதுலேயும் குறியா இருந்தாங்க இந்த தைரியத்துல, வலுவான வீரமணி டீமோடு மூர்க்கத்தனமா மோத ஆரம்பிச்சான் சங்கர். இங்கேயொரு கொலை விழுந்தா, அங்கே ஒரு தலை விழும்.
இந்த மோதல் விஸ்வரூபமாகி ஒரு கட்டத்துல வீரமணியின் அப்பாவான தாதா ஆத்தூர் கண்ணையனுக்கு ஸ்கெட்ச் போட்டான் சங்கர். கூடவே கண்ணையனின் மருமகனான ஆதி என்கிற ஆதிகேசவனுக்கும் ரூட் போட்டான்.
காரணம், இந்த ரெண்டு பேரும் தன்னை கொன்னு சாய்க்கிறநா சபதம் எடுத்திருப்பதா சங்கருக்கு தகவல் கிடைச்சதுதான். ‘கண்ணையனையும், ஆதியையும் கொல்லனும். ஒரே நேரத்துல ரெண்டு உசுரும் போவணும்’ என்று தன் டீமை கூப்பிட்டு வெச்சு அசைன்மெண்ட் கொடுத்தான் டீமை ரெண்டா பிரிச்சு ஒன்றை தன் தலைமையிலும், இன்னொன்றை தன் வலது கரமான பாலையா தலைமையிலும் இறக்கினான். ஆகி வீட்டுக்குப் போயி நாட்டு வெடிகுண்டு வீசி. சுதவை உடைச்சு உள்ளே நுழைஞ்சு சங்கர் வெட்டினான். அதே நேரத்துல கண்ணையனை பாலையா டீம் கழுத்தை அறுத்துக் கொன்னுச்சு.
இந்த ரெட்டைக் கொலை நடக்குறப்ப ஜெயில்ல இருந்த வீரமணி, கொள்ளி வைக்கிறதுக்கு ஜாமீன்ல வந்தான். ‘எங்கப்பாவை கொன்ன சங்கர், பாலையாவை துண்டுதுண்டா கூறு போடாம விடமாட்டேன்’ன்னு வீராவேசமா பேசிட்டுப் போன வீரமணியை அடுத்த சில மாதங்களில் கோர்ட் வளாகத்துலேயே வீச்சரிவாளால் குதறிக் கொன்னுச்சு சங்கர் டீம்.
எந்த தாதாவுக்கும் ஜெயிலுக்குள் போறது பிடிக்காது. காரணம் போலீஸிடம் சிக்கிட்டான்னு செய்தி வர்றதை அவமானமா நினைப்பாங்க ஆனா சங்கரோ சீரான கால இடைவெளியில் ஜெயிலுக்கு போயிட்டே இருப்பான். அங்கே இருந்துதான் மிக முக்கியமான ஸ்கெட்ச் அத்தனையும் போடுவான். மற்ற தாதாக்களோடு சேர்ந்து பல வகையான பிளான் எல்லாம் பண்ணுவான். சங்கர் ஜெயிலுக்கு போறான்னா அடுத்து ஏதோ சில பெரிய சம்பவங்கள் நடக்கப் போவுதுன்னு அர்த்தம்.
குறிப்பா, மதுரை ஜெயில் சங்கரின் பண்ணை வீடு மாதிரி. உட்லேண்ட் ஷூ, பிராண்டட் சட்டைகளுடன் புது மாப்ள மாதிரி அந்த ஜெயிலுக்குள்ளே உலா வருவான்னு ஜெயில் போலீஸ் நண்பர்கள் சொல்லியிருக்காங்க. அந்த ஜெயில்ல சுமார் மூணு மொபைல் போன், ஆறு சிம்கார்டுகள் வரைக்கும் பயன்படுத்தியிருக்கான். உள்ளுக்குள்ளே இருந்தே தன் டீமுக்கு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, பணம் வசூல்னு சகல அசைன்மென்ட்ஸையும் கொடுப்பான். சாதி ரீதியாவும், தொழில் ரீதியாவும் தனக்கு எதிரியா இருந்த பிரபல ரவுடி முட்டை ரவியை போலீஸார் என்கவுன்ட்டர்ல போட்டுத் தள்ளுனப்ப வெளியில் சந்தோஷப்பட்டாலும் அடுத்த குறி நானா?ன்னு உள்ளுக்குள் மிரளத் தொடங்கினான் சங்கர்.
அவன் ராஜ்ஜியம் நடத்துன அதே மதுரைக்கு சிறப்பான போலீஸ் அதிகாரிகள் வந்ததும், ஜெயில் அதிகாரிகளுக்கு பரேடு நடத்தி, மைக் மற்றும் ரெக்கார்டர் மறைக்கப்பட்ட செல்லுக்கு சங்கரை மாற்றி, அவன் பேசுற தகவல்களை வெச்சே அவனோட ஆட்கடத்தல், கொலை அசைன்மென்ட்ஸை முறியடிச்சாங்க.
இதை புரிஞ்சுகிட்ட மணல்மேடு சங்கர் ‘என்னை போலி என்கவுன்ட்டர்ல போலீஸ் கொல்ல துடிக்குதுன்னு ஜட்ஜிடம் தொடங்கி சுப்ரீம் கோர்ட் வரைக்கும் கதறிப் பார்த்தான். ஆனாலும், 2007ல் மதுரை சிறையில் இருந்து மயிலாடுதுறை கோர்ட்டுக்கு ஆஜர்படுத்திவிட்டு திரும்பிச் செல்லும்போது கந்தர்வகோட்டை முந்திரிக்காட்டு பகுதியில் வழக்கமான பாணியில் போலீஸால் வேட்டையாடப்பட்டான் சங்கர்.
ஆனா என்ன.. மரணத்துக்குப் பின் சங்கரை மாவீரன் ஆக்கி, போராளி நினைவு தினம்கூட நடக்கிறது. அதில் சில போலீஸாரும் மஃப்டியில் அஞ்சலி செலுத்துறதுதான் கொடுமை” என்று முடித்துவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
(ரத்தம் தெறிக்கும்) – எஸ். ஷக்தி.