பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளின் சங்கங்களே கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பு பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் செயலாளர் மாறன், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, “பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. ஒரு சில தனியார் பேருந்துகள் தான் அப்படி செய்கிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுங்கள். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து பேசவுள்ளோம்.” என்றனர்.
அதைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பேருந்துகளின் முன்பதிவுக்காக Roamie App என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்தது. அந்த செயலியை ஒரு பயணியாக பரிசோதித்துப் பார்த்தோம்.