ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 27) விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்ற இந்த இக்கட்டான போட்டியில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, “நாங்கள் வெற்றி பெறும்போது அந்த நேர்மறையான எண்ணத்தை அப்படியே அடுத்த போட்டிக்கு எடுத்துச் செல்வதுதான் எங்களது வழக்கம். அதேபோல் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சிப்போம்.
அடுத்த போட்டிக்கான எனது மனநிலையைப் பொறுத்தவரை, நான் போட்டியைப் பற்றி அளவுக்கு அதிகமாகச் சிந்திப்பதில்லை. விளையாடும் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கிறேன். ஆட்டத்தில் ஏதேனும் முன்னேற்றம் தேவைப்பட்டால் மட்டுமே அதைப் பற்றி யோசிப்பேன்.
போட்டிக்கு முந்தைய தயாரிப்புகள் என்று பார்த்தால், எதிரணியில் யார் பந்துவீசுகிறார்கள், இந்த ஆடுகளத்தில் அவர்களை எப்படி எதிர்கொள்வது மற்றும் மைதானத்தின் எல்லைகள் எவ்வளவு தூரம் உள்ளன போன்ற எளிய விஷயங்களை மட்டுமே சிந்திக்கிறேன்.
களத்தில் எப்போதும் நேர்மறையான அதிரடி உத்வேகத்துடன் விளையாட விரும்புகிறேன். நாம் அப்படி விளையாடும்போது பந்துவீச்சாளர்கள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள், அதனால் ஆட்டத்தைத் தொடர்ந்து என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயல்கிறேன்.
நான் ஆட்டமிழந்த பந்து மற்றும் சாதனை குறித்து எனக்கு அவுட்டான பிறகுதான் தெரியவந்தது. அந்தத் தருணத்தில் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பது மட்டுமே எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. சதங்கள் என்பது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
ஆனால் தற்போதைய சூழலில் கோப்பையை வெல்வதில் மட்டுமே எனது முழு கவனமும் உள்ளது. எதிரணியின் திட்டங்களைப் பற்றி யோசிக்காமல், எனது சொந்தத் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி எப்போதுமே இயல்பான கிரிக்கெட்டை விளையாடவே முயற்சிப்பேன்” என்று உத்வேகமாகப் பேசியிருக்கிறார்.