தற்போதைய அதிகபட்ச நீர் விகிதம் ஏக்கருக்கு ரூபாய் 7 மட்டுமே ஆனால் இந்த திட்டத்தின் காரணமாக தஞ்சாவூர் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15 வரி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதிக நீர்விகிதம் மக்கள் தர தயாராக உள்ளனரா என்று கேள்வி எழுப்பிய உறுப்பினர் சத்தியமூர்த்தியின் வாதத்துக்கு, “கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகள் ரூபாய் 20 மற்றும் ரூபாய் 25 வரை செலுத்த உறுதி அளிக்கின்றனர்.
தஞ்சாவூர் மக்கள் ரூபாய் 15 நீர் விகிதம் செலுத்த தயாராக உள்ளனர் என்று கூறி சீரமைப்பு மற்றும் பாசனம் செய்யப்படும் பகுதி குறித்து பொறியியல் கண்ணோட்டத்தில் சாத்தியமானது என்று நிபுணர்கள் கருதுவதற்கு ஏற்ப கமிட்டியின் ஆலோசனையால் நான் வழிநடத்தப்படுவேன்” என்று சி.பி.ஆர் உறுதி அளித்ததை ஏற்று தீர்மானம் சபை முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முக்கியமான சட்ட முன்மொழிவு தீர்மானத்தில் எஸ்.சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கடரமண அய்யங்கார், முகமது கவுஸ் மான்சாஹிப், ஜி.ராமேஸ்வர ராவ் பந்தலு, வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர், ராவ்பகதூர் சி. நடேச முதலியார், பி.எஸ்.ராஜப்பா, சர்.சி.பி.ஆர் போன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பங்கு பெற்றனர்.
1925-ம் வருடம், காவிரி மேட்டூர் திட்டம் குறித்து மாநிலச் செயலரிடமிருந்து (SECRETARY OF STATE) இறுதி ஆணை அந்த ஆண்டிலும் கிடைக்கவில்லை. மேட்டூர் திட்டத்துக்கு 1925-1926 பட்ஜெட்டில் ரூபாய் 1.3 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக நிலம் கையகப்படுத்தும் வேலை சாத்தியமாகவில்லை.
இந்திய அரசு, மெட்ராஸ் நீர்ப்பாசன மசோதா நிறைவேற்றம் செய்ய காத்திருந்தது. 1924-ம் வருட இறுதியில், டிசம்பர் மாதம் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நீர்ப்பாசன மசோதா நிறைவேற்றப்பட்டாலும் (அரசாணை எண் 212 I, 18 மே 1925) சாத்தியக்கூறுகள் முன்வைக்கப் பட்டாலும், இந்த மசோதா 7.10.1925 வரை சட்டமாக அறிவிக்கப்படவில்லை. இதில் ஓர் ஆச்சரியமான செய்தி காரணம் வெளிப்படையாக தெரியவில்லை, அறிவிக்கப்படவில்லை!
இந்த மேட்டூர் திட்டம் மூலம் வருடம் 1,50,000 டன் உணவு பொருட்கள் விளைவிக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்துதல் காரணமாக கிராம மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது சட்டமன்றத்தில் ஒரு வெட்டுத்தீர்மானம் கொண்டு வந்தார் ஓர் உறுப்பினர்.
அறிந்து கொள்ள தொடர்ந்து அவையை கண்காணிப்போம்!