RSS மோகன் பகவத் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைவேந்தர்கள்; கண்டித்த பினராயி, சதீசன்; கொந்தளித்த பாஜக

Spread the love

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் அதில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மோகன் பகவத் பதிலத்தார்.

அந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ் எந்த ஒரு தரப்பையும் எதிர்க்கும் அமைப்பல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரிகளும் இல்லை. அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் வளர்வதைக் கண்டு அஞ்சும் சிலரே, அமைப்புக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்.

நாடு மற்றும் உலகத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றுவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதன்மை நோக்கம். உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் செய்தி.

கடந்த 100 ஆண்டுகளில் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல பணிகளை ஆர்.எஸ்.எஸ் செய்துள்ளது. அரசின் ஒரு பைசா கூட உதவி பெறாமல், சுமார் 1,30,000 சேவைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். வெளியில் இருந்து எந்த நிதி உதவியும் பெறாமல் இந்தச் சேவைகள் நடைபெறுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் ஒரு அரசியல் அமைப்பு அல்ல. இருப்பினும் எங்கள் ஸ்வயம்சேவகர்கள் அரசியலில் உள்ளனர். ராமர் கோயில் விவகாரம் மற்றும் சட்டப்பிரிவு 370 ரத்து போன்றவை அரசியல் சார்ந்தவை அல்ல. அவை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள்.

இந்தியாவை ஒரு தேசியமாக மாற்றியது பிரிட்டிஷார் அல்ல, அது நம்முடைய இந்துத்துவக் கலாசாரம்தான். ஆர்.எஸ்.எஸ்-ன் பார்வையில், ‘இந்து’ என்பது எந்த ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையையும் குறிப்பதல்ல” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அழைப்பின்பேரில் கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனன் குன்னும்மல், மலையாள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.ஆர்.பிரசாத் மற்றும் மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டி.மாவூத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாகவே தற்போது அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி

இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், “துணைவேந்தர்களின் செயலை மதச்சார்பற்ற கேரளா மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது. உயர்கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பல்கலைக்கழகங்களில் சங்க பரிவாரின் நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.

இதுபற்றி முதல்வர் வி.டி.சதீசன், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ​”துணைவேந்தர்களின் இந்தச் செயல் கேரளாவின் கல்வி மரபுக்கும், அந்தப் பதவியின் கண்ணியத்திற்கும் எதிரானது. தீவிர வகுப்புவாதத்தைப் பேசும் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், பொதுசமூகத்தில் தங்களுக்குள்ள மரியாதையை அவர்கள் இழந்துவிட்டனர்.

வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் எந்தச் செயலையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே, நிகழ்ச்சியில் பங்கேற்ற மூன்று துணைவேந்தர்களும் கேரள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியில் பேசும் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியில் பேசும் மோகன் பகவத்

இதற்குப் பதிலளித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் வி.முரளீதரன் எம்.எல்.ஏ, “மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் துணைவேந்தர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். யு.ஜி.சி விதிகளை அவர்கள் மீறவில்லை. விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. நாட்டின் பிரதமரே ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்தான். அவரை இனி முதல்வர் சந்திப்பாரா? ஆர்.எஸ்.எஸ் நாட்டின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம். துணைவேந்தர்கள் பங்கேற்பதை எந்த விதியின் அடிப்படையில் தவறு எனச் சொல்கிறீர்கள்? ​

துணைவேந்தர்கள் ஏதேனும் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருந்தால், தாராளமாக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். மிரட்டல் விடுத்து யாரையும் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுக்கும் காலம் முடிந்துவிட்டது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *