தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துத் தயாரிப்பாளர் சங்கத்தினர் பேசியிருக்கின்றனர்.

சங்கம் சார்பாகப் பேசிய தலைவர் தமிழ்குமரன், “தமிழக அரசுக்கு நாங்கள் முன்வைத்த முதல் கோரிக்கை, திரைப்படங்களுக்கான மானியம் வழங்க வேண்டும் என்பதுதான்.
அதன்படி, 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 224 திரைப்படங்களைத் தேர்வு செய்து, தலா 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி 64 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 6 மணி சிறப்புக் காட்சி உட்படத் தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தோம். கேட்ட உடனேயே ஒரே உத்தரவின் மூலம் அதனைச் செயல்படுத்திக் கொடுத்துவிட்டார்கள்.
எங்கள் திரையுலகிலிருந்து சென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கும், அமைச்சர் ராஜ்மோகனுக்கும் எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றவர், “சங்கத்தின் வளர்ச்சி மற்றும் நிதி திரட்டுவது தொடர்பாக மூத்த தயாரிப்பாளர்கள், முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக, வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்ட விழா நடத்தி, மூத்த தயாரிப்பாளர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் சங்கத்திற்கும் எங்களுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்” என்றார்.

தொடர்ந்து ‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு தொடர்பாகப் பேசியவர், “தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தால், அது 10 ஆண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் வசம் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தயாரிப்பாளரின் அனுமதியோடு வேறு யார் வேண்டுமானாலும் அந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பே ‘சண்டியர்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆனால், முன்பே அந்தப் பெயரில் படம் வெளியானபோது எந்த எதிர்ப்பும் எழவில்லை” என்றார்.