பெரும் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாகக் கடந்த வெள்ளிக்கிழமை ‘சத்லஜ்’ என்கிற பாலிவுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
ஆனால், வெளியான இரண்டு நாட்களுக்குள்ளாகவே மீண்டும் அப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இப்படத்தைப் பார்க்கலாம்.

பிரபல பாடகரும் நடிகருமான தில்ஜித் தோஷான்ஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பஞ்சாபில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஜஸ்வந்த் சிங் கல்ராவுக்கு நேர்ந்த விஷயத்தை வைத்து இப்படத்தின் கதையைக் கட்டமைத்திருக்கிறார் இதன் இயக்குநர் ஹனி ட்ரெஹான்.
இத்திரைப்படத்தைக் கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியிலேயே தணிக்கைக்காகப் படக்குழுவினர் அனுப்பியிருக்கிறார்கள். முதலில் இப்படத்திற்கு ‘கல்லுகாரா’ என்றே பெயரிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு ‘பஞ்சாப் 95’ என மாற்றப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் இந்தத் தலைப்பை மாற்றச் சொல்லிப் பரிந்துரைத்தது.
இது போன்ற அழுத்தங்களால் இப்படத்தின் சர்வதேசத் திரைப்பட விழா திரையிடல்களும் கடைசி நேரத்தில் ரத்தானது. தணிக்கை வாரியம், தலைப்பை மாற்றச் சொன்னதோடு, 127 கட்களையும் பரிந்துரைத்திருக்கிறது.

தணிக்கை குழு சொன்ன கட்களை நீக்கினால், படத்தின் முக்கியக் கதைக் கருவை பாதிக்கப்படும் எனப் படக்குழுவினர் கருதியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் இப்படம் தாமதமானது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.
ஆனால், தணிக்கைப் பணிகளால் மீண்டும் ரிலீஸ் தடைப்பட்டது. இப்படிப் பெரும் சவால்களுக்குப் பிறகு, எவ்வித ப்ரோமோஷனும் இன்றி படத்தைக் நேரடியாக ஓடிடி-க்கு கொண்டு வந்தது இப்படக்குழு.
இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இப்படத்தின் அன்கட் வெர்ஷன் ஜீ5 தளத்தில் வெளியானது. ஆனால், வெளியாகி 48 மணி நேரத்திற்குள் இப்படம் இந்தியாவிற்குள் மட்டும் பார்க்க முடியாதபடி நீக்கியிருக்கிறார்கள்.
படத்தை நீக்கியது பற்றி ஜீ5 நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “‘சத்லஜ்’ திரைப்படம் வெளியானது முதல் அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழ வைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தைக் காண்பதற்காகத் சந்தா செலுத்தி பார்த்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் எங்களுக்கும், இந்தத் கதையைத் திரையில் கொண்டுவர உழைத்த ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அர்த்தத்தைத் தந்துள்ளது. ஜீ5 நிறுவனமாகிய நாங்கள், ‘சத்லஜ்’ திரைப்படத்திற்கும் அதன் பின்னணியில் உள்ள படைப்புச் சுதந்திரத்திற்கும் எப்போதும் உறுதுணையாக நிற்போம்.
சக்திவாய்ந்த கதைக் களங்களுக்கு மக்களை ஊக்குவிக்கவும், காலத்தைக் கடந்து நிலைத்து நின்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும் கூடிய ஆற்றல் உண்டு என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உண்மையான மற்றும் அர்த்தமுள்ள கதைகளை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருக்கிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள சில சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மறுஅறிவிப்பு வரும் வரை ‘சத்லஜ்’ திரைப்படம் இந்தியாவில் தற்காலிகமாகக் காணக் கிடைக்காது.
சட்டரீதியான உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, இந்தத் திரைப்படத்தை எவ்வளவு சீக்கிரம் நம் நாட்டுப் பார்வையாளர்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்க முடியுமோ, அதற்கான அனைத்து தகுந்த முயற்சிகளையும் எடுக்க நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம்.
படைப்பாளர்கள் மீதும், கலை நேர்மையுடனும் ஒரு நோக்கத்துடனும் கூறப்படும் கதைகள் மீதும் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்போதும் மாறாதது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக பேசவிடாமல் தணிக்கை குழு அழுத்தம் தருவதாகவே பலர் விவாதித்து வருகின்றனர். “இப்படம் பஞ்சாபின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரான ஜஸ்வந்த் சிங் கல்ராவின் உண்மை வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டது.
1984 முதல் 1994 வரையில், பஞ்சாபில் அடையாளம் தெரியாமல் போலீசாரால் சட்டத்திற்குப் புறம்பாக நிகழ்த்தப்பட்ட பல மனித உரிமை மீறல்கள் சம்பவத்தை ஜஸ்வந்த் சிங் கல்ரா உலகிற்கு ஆதாரங்களுடன் வெளிச்சம்போட்டுக் காட்டினார்.
பிறகு, 1995-ல் அவரும் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இப்படியான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதால்தான் இப்படம் இத்தனை தடைகளைச் சந்தித்து வருகிறது. எந்தவொரு அரசும், காவல்துறையின் அத்துமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பொதுவெளியில் திரையிட்டுக் காட்டுவதை விரும்புவதில்லை.

இந்தியாவின் இறையாண்மை, காவல்துறையின் பிம்பம் போன்றவற்றிற்காகத் தணிக்கை வாரியம் இப்படத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இப்படம் ஜீ5 தளத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்துப் இப்படத்தின் நடிகரும், பிரபல பாடகருமான தில்ஜித் தோஷான்ஜ், “நாங்கள் திட்டமிட்டுத்தான் இந்த முறை திரைப்படத்திற்கான எந்தவொரு விளம்பரத்தையும் செய்யாமல் தவிர்த்தோம்.
ஏனெனில், நாங்கள் முன்கூட்டியே அறிவித்து, விளம்பரம் செய்திருந்தால், இத்திரைப்படம் கண்டிப்பாக வெளியாகியிருக்காது. மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் இந்த உண்மை வரலாறு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருந்தது.
அது மிகக் குறுகிய காலமே இணையத்தில் கிடைத்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் பார்க்க வேண்டும் என விரும்பினோம். நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்துங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுத்துங்கள்.
ஆனால் நான் சாகும் நாள் வரை என் பஞ்சாப் மண்ணுக்காக மட்டும்தான் நிற்பேன்! முதல் நாளிலிருந்தே படத்திற்கு இப்படியான தடைகள் நடக்கும் என்று எங்கள் ஒட்டுமொத்தக் குழுவிற்கும் நன்றாகவே தெரியும்.
இந்தச் சம்பவம் 1995-ல் நடந்தது. அப்போதும் மக்கள் இதைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இப்போது 2026-லும் அதையேதான் செய்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது எனக்கு முழு மனநிறைவு இருக்கிறது. திரைப்படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துவிட்டது. உங்களிடம் திரைப்படம் இருக்கிறது, மக்கள் எல்லாரும் அதனைப் டவுன்லோட் செய்துவிட்டார்கள்.
வெள்ளிக்கிழமை திரைப்படம் வெளியாகும்போதே என் மனதில் திங்கட்கிழமை காலையில் அரசு அலுவலகங்கள் திறக்கும்போதுதான் திரைப்படத்தைத் தடை செய்வார்கள் என்று நினைத்தேன்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவே இப்படிச் செய்வார்கள் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது எனக்குப் பெரிய அதிர்ச்சி இல்லை. ஏனெனில் இது நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும்.
இந்த ஒரு திரைப்படத்திற்காக நாங்கள் பட்ட துயரங்கள் எங்களுக்குத்தான் தெரியும். திரைப்படத்தைத் தொடங்குவதற்கே எங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகியது.
படத்தொகுப்பு முடிந்த பிறகு, நான்கு ஆண்டுகளாகத் திரைப்படம் அப்படியே முடங்கிப் போயிருந்தது. நான் இத்திரைப்படத்துடன் இரண்டு ஆண்டுகள் பயணித்தேன்” என வருத்தத்துடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசியிருக்கிறார்.