சுமார் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளிப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து வங்கி விசாரணையைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், தகவல் கசிவின் தன்மை மற்றும் பாதிப்புகளை மதிப்பிடவும் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
எப்படி வெளியானது தகவல்?
கடந்த அக்டோபர் 16-ம் தேதி, தனது அச்சுறுத்தல் உளவுத் தகவல் சேவை வழங்குநர், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆகியவற்றிடமிருந்து இதுதொடர்பான எச்சரிக்கைகள் வந்ததாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
டார்க் வெப்பில் கிடைத்த சுமார் 3.75 லட்சம் பதிவுகளை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய பதிவுகள் அடையாளம் காணப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் பதிவுகளில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள், பிறந்த தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள், வங்கிக் கிளை விவரங்கள், CIF அடையாள எண்கள், கடன் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பான பதிவுகளின் விவரங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தகவல்கள் உண்மையானவையா, முழுமையாகக் கசிந்துள்ளனவா, அவை எங்கிருந்து வெளியானது என்பது போன்ற விவரங்கள் இன்னும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.
விசாரணையில் இறங்கிய எஸ்பிஐ
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ தனது சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்தியுள்ளது. மேலும், CERT-In அங்கீகாரம் பெற்ற சுயாதீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தையும் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது.
தகவல்கள் எவ்வாறு வெளியானதாகக் கூறப்படுகிறது, எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், இதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான தடுப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளையும் வங்கி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
வங்கிச் சேவைகளுக்கு பாதிப்பா?
இந்த விவகாரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தினாலும், வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
வங்கியின் முக்கியச் செயல்பாடுகள், நிதிச் செயல்திறன் மற்றும் வணிகத் தொடர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தகவல் கசிவு குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வாடிக்கையாளர்களின் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வங்கி தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

