SIR-க்கு எதிராகக் களமிறங்கும் நிர்மலா சீதாராமன் கணவர்… அக். 23-ல் நாடு தழுவிய போராட்டம்! – Kumudam

Spread the love

SIR-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், அக்டோபர் 14-ம் தேதி உருவாக்கப்பட்ட ‘People Against SIR’ கூட்டமைப்பு சார்பில் நாளை(அக்.,23) நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘ஒவ்வொரு கையிலும் தேசியக் கொடி; ஒவ்வொரு தெருவிலும் ஜந்தர் மந்தர்’ என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், SIR பணிகளை ரத்து செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

பரகலா பிரபாகருடன் பிரகாஷ் ராஜ், பிரசாந்த் பூஷன்!

இந்தப் போராட்டத்தில் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பரகலா பிரபாகரும் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே போராட்டத்தில் பங்கேற்ற பரகலா பிரபாகர்!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பரகலா பிரபாகர், கடந்த அக்டோபர் 8-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் நடைபெற்ற SIR எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றிருந்தார். அப்போது அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ரத்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

SIR நடவடிக்கையை வாக்குரிமையைப் பறிக்கும் செயலாகப் பரகலா பிரபாகர் விமர்சித்துள்ளார். தகுதியான குடிமக்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதனை ‘ரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் SIR நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் நடைபெறவுள்ள அடுத்தகட்டப் போராட்டத்தில் பரகலா பிரபாகர் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *