இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்களின் தலைவர்களை அழைத்து இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். இக்கூட்டத்தில் மத்திய தகவல் தொழில் துறை அமைச்சரும் கலந்து கொண்டார்.இதில் வங்கிகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாகத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பக் கண்காணிப்பை வலுப்படுத்த போதிய நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்றும், சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் புதிதாக வந்துள்ள ஏ.ஐ மூலம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. Mythos போன்ற AI கருவிகள் மனிதர்களை விட வேகமாகப் சைபர் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அதன் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்றாலும், அவை தவறானவர்களின் கைகளில் கிடைத்தால் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயமும் இருக்கிறது.
ஏ.ஐ மூலம் சைபர் பாதுகாப்பு மட்டுமல்லாது, ஹேக்கிங் செய்வதற்கும் பயன்படுத்த முடியும் என்பதால் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன. இதையடுத்து எஸ்பிஐ வங்கி தலைவர் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி தலைமையிலான இந்திய வங்கிகள் சங்கம் இத்தகைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. அதோடு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற ஒழுங்குமுறை ஏஜென்சி அதிகாரிகள் இணைந்து புதிய ஏ.ஐ. நாட்டின் நிதி நிலை மற்றும் இணையப் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்து தனியாக ஆய்வு செய்து வருகின்றனர்.