2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. “திராவிட மாடல் 2.0′ என்ற முழக்கத்துடன் தெம்பாக இருக்கும் திமுக கூட்டணி, ‘இந்த முறை நிச்சயம் எங்கள் ஆட்சிதான்’ எனக் களமாடும் அதிமுக கூட்டணி ஒருபுறம், ‘மாற்று அரசியல்’ என்ற கோட்பாட்டுடன் தேர்தல் அரசியலில் தனித்து இயங்கும் நாம் தமிழர் கட்சி, `எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என அன்ப்ரெடிக்டபிளாக இருக்கும் புது வரவு த.வெ.க மறுபுறம் என, நான்குமுனைப் போட்டியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய சாதனையும் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும்.

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.